யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலர் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் அலுவலகம் தவறிழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு உடனடியாக நீதி வழங்குமாறும் பணித்துள்ளது.
பாவனையாளர் ஒருவருக்கு இணைப்பு அனுமதி வழங்குவதற்காகப் பாவனையாளரிடமிருந்து பணம் அறவிடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படும் உள்ளக சுற்று நிருபங்கள் மற்றும் ஆவணங்கள் ஏதுமிருப்பின் அது பற்றித் தங்களுக்கு அறியத்தருமாறும் ஆணைக்குழுவின் பாவனையாளர் விவகாரங்களுக்கான பணிப்பாளர் யசந்த ரதுவிதான இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளரைக் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு விண்ணப்பித்த போது, அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், இது தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அவருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட பின்னரும், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு கோரியமையை ஆதாரங்களுடன் மேன்முறையீடு செய்ததை அடுத்தே இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு இவ்வாறு பணித்துள்ளது.
சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சோலர் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
எனினும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்து கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலர் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார்.
தகவல் அறியும் சட்டம்
அதைவிட, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர்களைப் பொருத்துவதிலும் முறைகேடாக நடந்து கொண்டுள்ளார் என்று பாவனையாளர்கள் பலர் முறைப்பாடு செய்துமிருந்தனர்.
இதேநேரம் இணைப்புக்கான அனுமதி வழங்கல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வலுசக்தி அமைச்சரிடம் நேற்று நேரடியாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில், அனுமதிக்கு விண்ணப்பித்த ஒழுங்கு, அனுமதிக்காகப் பணம் செலுத்திய ஒழுங்கு, அனுமதி வழங்கப்பட்ட ஒழுங்கு உட்பட முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களை இலங்கை மின்சார சபையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வாடிக்கையாளர்கள் பலர் கேட்டிருந்த போதிலும், இது வரை அத்தகைய தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.