இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் நிறுவுநர் நாளும் பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலையின் ஏழூர் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை (14) பாடசாலை அதிபர் இ.கணேசானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்ற வடக்கு மாகாண ஆளுநர், சாதனை படைத்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசில்களை வழங்கினார்.
அந்த நிகழ்வில் உரையாற்றியபோது மேற்படி தெரிவித்தவர் அங்கு மேலும் கூறுகையில்,
நாங்கள் கல்வி கற்ற காலத்துக்கும் தற்போதைய காலத்துக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அன்று எங்களின் பாடசாலை அதிபர்தான் மேலதிக நேர வகுப்புக்களை எடுத்தார்.
அவர்களைப் போன்ற ஆசிரியர்கள்தான் இன்றும் எங்களுக்கு முன்னுதாரணமான ‘கதாநாயகர்களாக’ இருக்கின்றார்கள்.
அன்றைய காலத்தில் நாம் தனியார் கல்வி நிலையங்களுக்கு கூட செல்வதில்லை. அதற்கான தேவைப்பாடு ஏற்படவில்லை. கல்வியால்தான் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
கிராமத்தின் அபிவிருத்தியோ, எதுவாகினும் கல்வியால் அந்த மாற்றங்களை உருவாக்க முடியும். அதேநேரம் கல்வியில் எவ்வளவு உயர்ந்து விளங்கினாலும் நாங்கள் பண்புள்ளவர்களாக இல்லாவிட்டால் எம்மை யாரும் மதிக்க மாட்டார்கள்.
உயர்பதவியிலிருந்தாலும் பண்பு இல்லாவிட்டால் யாரும் எம்மை மதிக்க மாட்டார்கள். பதவி வரும் போது பணிவு வரவேண்டும்.
இன்றைய மாணவ சமுதாயத்துக்கு பணிவு, இரக்கம், அன்பு என்பவற்றை ஆசிரியர்கள் கூடுதலாக போதித்து அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றவேண்டும்.
ஆசிரியர்கள் அன்றைய காலத்தில் எமக்கு அடித்தால் நாம் வீட்டில் சென்று சொல்வதற்குப் பயப்படுவோம். ஏனென்றால் வீட்டிலும் மீண்டும் அடி விழும்.
ஆனால் இன்று அது தலைகீழாகிவிட்டது. ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிப்பது என்பது அவர்களை எதிரியாகக் கருதி அல்ல. அவர்களின் வளர்ச்சிக்காகவே தண்டிக்கின்றனர்.
இன்று தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பதற்கே எல்லோரும் தயங்குகின்றனர். அந்தளவு தூரத்துக்கு பயம். நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிப்போகின்றனர்.
அதேபோல, வீதிகளில் குப்பை போடுகின்றனர். 1970ஆம் 1980ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தான் மிகத் தூய நகரம். இன்று மிக குப்பையான நகரமாக மாறியிருக்கின்றது.
மோட்டார் சைக்கிள்களில், கார்களில் வந்து குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். வீதியிலும், வாய்க்காலிலும் குப்பை போடுவது நாங்கள்தான்.
வீதிகளையும், வாய்க்கால்களையும் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவதும் நாங்கள்தான். பின்னர் வெள்ளம் வந்துவிட்டது என்று கத்துவதும் நாங்கள்தான்.
எங்களின் மனநிலை மாறவேண்டும். இளமையில் – இந்த மாணவர்களிடத்தில் சரியான பழக்க வழக்கங்களை – விழுமியங்களை ஆசிரியர்கள் விதைக்கவேண்டும்.
அப்போதுதான் எதிர்காலத்தில் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். நாம் மற்றவருக்கு உதவவேண்டும். அப்படிச் செய்தால் எமக்கு பல மடங்கு திருப்பிக்கிடைக்கும்.
இந்தப் பழக்கங்களை மாணவர்களிடத்தில் வளர்த்தெடுக்க வேண்டும். எதிர்காலச் சிற்பிகளான மாணவர்கள் சமூகத்தில் கல்வியறிவுடன் சிறந்த ஒழுக்கத்துடன் வளரவேண்டும். ஆசிரியர்கள் வழிகாட்டவேண்டும் என்றார்.