அரசியல் ஞானியாக விளங்கித் தேசத்தின் குரலான பாலா அண்ணா.

68 0

தமிழீழ விடுதலைப்போராட்டம் தன்னகத்தே பல்வேறு ஆளுமைகளைத் தமிழர்கள் மட்டத்தில் உருவாக்கியதை நாம் மறுக்கமுடியாது. உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறும் அதனது படைத்துறை, ஆட்சிமுறை, நீதி மற்றும் நிர்வாகச்செழுமை என்பவற்றால் தமிழரது அரசாட்சிப் பரிணாமத்துவமாகப் பதிவாகியுள்ளது. இந்தப் பன்முக ஆற்றல்களின் பின்னே பெரும் அர்ப்பணிப்பும் தியாகமும் ஒருங்கே இணைந்ததன் பயனே என்றால் மிகையன்று. நல்வாழ்வையும் தம்வாழ்வையும் தேசத்திற்காக அர்ப்பணித்த பல்லாயிரமாயிரானவர்களைத் கொண்டதே தமிழீழ விடுதலைப் போராட்டமாகும். மிக உயரிய வாழ்வு வாழக்கூடிய தமது சுய ஏதுநிலைகளைக் கடந்து தம்மைத் தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்த பலருள்”பாலா அண்ணா” என்று அனைவராலும் அன்போடு விழிக்கப்படும், உலகப்பரப்பெங்கும் தமிழீழ தேசத்தின் குரலாக ஒலித்த மதிப்பிற்குரிய முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களது ஈக வாழ்வும் சிறப்பிற்குரியதாகும்.

பிரித்தானியாவிலுள்ள லண்டன் சௌத்பாங் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றவர். இலங்கையின் புகழ்பூத்த அச்சூடகங்களில் ஒன்றான வீரகேசரியில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். பின்னர் இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதுவராலயத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றியதனால் பிரித்தானியக் குடியுரிமையைப் பெற்றார். இலண்டனில் வாழ்ந்த காலத்தில், அவர் எழுதிய கரந்தடிப்போர் முறை தொடர்பான நூலினைப் படித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான மேதகு வே.பிரபாகரன் அவர்கள், பாலா அண்ணா அவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்கின்றார். இந்தியாவில் போராளிகளின் பயிற்சிப் பாசறைகள் அமைந்திருந்த காலத்தில் அவர்களுக்கான அரசியல் வகுப்புகளை நடாத்தியவர். 1983ஆம் ஆண்டு சிங்கள அரச பயங்கரவாதத்தின் தமிழினப் படுகொலையான கறுப்பு யூலையோடு பிரித்தானியாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறுகின்றார். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளோடு நெருங்கிச் செயற்பட்டார். 1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தைக் குழுவிற்கான ஆலோசனைகளை வழங்கிய பாலா அண்ணா, காலவோட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும், தலைமைப் பேச்சவார்த்தையாளராகவும் நிலையுயர்ந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான முயற்சிகளிற் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக இருந்ததோடு, ஜெனீவாவில் நடைபெற்ற, ஜெனீவாவின் முதலாவது (பெப்ரவரி22-23) சுற்றுப்பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அனைத்துல அரங்கிலே, அனைத்துலக சட்டங்களுக்குட்பட்ட உலகிலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் உரித்துடைய அடிப்படை உரிமையான சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பதை நிறுவியதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளை அனைத்துல அரங்கில் தமிழரது விடுதலை அமைப்பாகப் பரிணமிக்க வைப்பதிலும் பெரும் பங்காற்றினார். நோய்வாய்பட்டு உடல்நிலை தளர்ந்த நிலையிலும் தமிழீழ விடுதலைக்கான தனது பற்றுறுதியை வெளிப்படுத்தியதோடு, தேசியத் தலைவர் மீது அளப்பரிய அக்கறையைச் செலுத்தியதோடு, அவரது பாதுகாப்புக்குறித்து ஆழ்ந்த கரிசனையையும் கொண்டவராகத் தமிழீழத்தின் அரசியல் பிதாமகனாகவே இறுதிக்கணம்வரை வாழ்ந்தார்.

தமிழீழ விடுதலைக்கான பணியை இடையறாது தொடர்ந்த அவருக்கு 2000ஆம் ஆண்டு சிறுநீரக மாற்றுச் சிகிச்சையளிக்கப்படுகிறது. மிகவும் சக்திவாய்ந்த மருந்துகளின் தாக்கம் கரணியமாக உடலின் முதன்மை உறுப்புகளான வயிறு, சுவாசப்பை, ஈரல் மற்றும் எலும்புமச்சையெனப் புற்றுநோய் பரவியுள்ளதை இலண்டனில் மருத்துவர்கள் நவம்பர் 2006இல் உறுதிசெய்கின்றனர். நோய்தாக்கம் கரணியமாகத் தொடர் மருத்துவப் பராமரிப்பில் இருந்துவந்த பாலா அண்ணா அவர்கள் 14.12.2006 ஆம் நாளன்று தனது புரட்சிகர வாழ்வுப் பயணத்தை நிறைவு செய்து கொள்கின்றார்.

பாலா அண்ணாவின் மறைவு குறித்து 2006ஆம் ஆண்டில் பி.பி.சீயினுடைய சிங்களச் சேவையின் ஆசிரியரான பிரியந் லியனகே அவர்களால் பகிரப்பட்ட கட்டுரையொன்றில் பாலா அண்ணாவின் மறைவானது இருதரப்புக்கும் இழப்பு என்று சுட்டியதன் ஊடாக அவரது அரசியல் சமாதான முயற்சிகளின் முதிர்நிலையைச் சிங்களத் தரப்புகளும் மிகுந்த மதிப்போடு நோக்கிதென்பதை அறியமுடிவதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகப் பெருமதிப்போடு பார்ப்பதையும் காணலாம்.

04.03.1938ஆம் ஆண்டு பிறந்து 14.12.2006 ஆம் ஆண்டில் தனது 68ஆவது வயதில் காலமான முனைவர் திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களால் “தேசத்தின் குரல்” என்ற புகழ் மதிப்பு வழங்கப்பட்டது. இலண்டனில் நடைபெற்ற அவரது இறுதி வணக்க நிகழ்வில் உலகெங்கும் இருந்து வருகைதந்த தமிழர்களோடு, பல்வேறு அரசியல் செயற்பாட்டாளர்களும் கலந்தகொள்ள மிகப்பிரமாண்டமான அணிவகுப்போடு அவரது இறுதிப்பயணம் நிறைவுற்றது.

தமிழீழத்தின் அரசியல் நிழற்குடையாக, உறுதிமிக்க அரசியல் ஞானியாக விளங்கித் தேசத்தின் குரலாக உயர்ந்த பாலா அண்ணா அவர்களை நினைவுகொள்ளும் இன்நாளில், நாம் கடந்து செல்லும் தமிழர் அரசியல் துருப்பிடித்த எஃகின் நிலையொத்ததாகிவிட்டதா என்று ஐயுறும் வகையில் தேசத்தின் அரசியல் சிங்கள அரசினது தேர்தல் திருவிழாக்களுள் சிதைவடைந்து கிடக்கிறது. புதிய திசைகள் தெரிவதாகப் பிதற்றும் புரிதலற்ற அரசியற் பிழைப்புவாதத் தலைமைகளைச் செவிமடுத்திருக்காது தேசத்தின் குரலாக ஒலித்த பாலா அண்ணா போன்றவர்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து உறுதியோடு பயணித்துத் தமிழீழம் என்ற இலட்சியத்தை அடைவதும், அதற்காக உழைப்பதுமே “பாலா அண்ணா” என்ற உயர் மனிதருக்கு நாம் செய்யும் கைமாறாக அமையும்.
நன்றி
மா.பு.பாஸ்கரன்