மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை: முதல்வர் ஸ்டாலின் தகவல்

21 0

மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு நேற்று வந்த முதல்வர் ஸ்டாலின், மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் காணொலியில் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது: தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. ஏற்கெனவே 2 நாட்களாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மிகப் பெரிய அளவுக்கு பாதிப்புகள் இல்லை. அதுபோல வந்தாலும், சமாளித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.

நீர்த்தேக்கம், ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதற்கு முன்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி பகுதிக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்றுள்ளார். திருநெல்வேலிக்கு சென்றிருந்த அமைச்சர் நேரு, திருச்சி மாவட்டத்தில் மழை பெய்துள்ளதால் அங்கு வந்தார். திருநெல்வேலியில் மழை பெய்துள்ளதால் அவரை மீண்டும் அங்கு அனுப்பி உள்ளோம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் முடிந்து, நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட வழங்கி முடிந்துவிட்டது. மத்திய அரசிடம் பேரிடர் நிதியை தொடர்ந்து கேட்கிறோம். நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்கள் பேசியுள்ளனர். ஆனாலும், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு குறைவாகவே தருகின்றனர். மத்திய அரசு ஏற்கெனவே வழங்கியுள்ள நிதி எப்படி போதும். அது போதுமானதாக இல்லை. ஊடகத்தினர் இதுபற்றி தொடர்ந்து எழுதினால், அதுவே பெரிய அழுத்தமாக இருக்கும்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எங்களால் முடிந்தவரை ஒன்றுசேர்ந்து இதை கடுமையாக எதிர்ப்போம். கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து போராட்டம் நடத்துவது குறித்து யோசனை செய்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.