டங்ஸ்டன் விவகாரத்தில் பிரச்சினையை உருவாக்கும் திமுக; தீர்வு காணும் பாஜக: அண்ணாமலை கருத்து

28 0

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை தமிழக அரசு இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும். டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக பிரச்சினையை உருவாக்குகிறது. அதற்கு தீர்வை பாஜக கொடுக்கிறது என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டெல்லி சென்றுள்ள அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தமிழக அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து, மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர். மத்திய அரசின் பார்வையில், தமிழகத்தில் மிகவேகமாக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், தமிழகத்தில் மாநில பேரிடர் நிவாரண நிதி 100 சதவீதம் முழுமையாக பயன்படுத்தப்படும். ஆளும் கட்சியில் 40 எம்.பி.க்கள் இருந்தாலும், பாஜக தலைவர்கள் தான் தமிழக மக்களுக்காக ஆக்கப்பூர்வமாக உழைத்து கொண்டிருக்கின்றனர்.

திமுக பிரச்சினையை உருவாக்குகிறது. அதற்கு தீர்வை பாஜக கொடுக்கிறது. உதாரணமாக, டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு காரணமாக இருந்தது தமிழக அரசு தான். மாநில அரசுக்கு டங்ஸ்டன் வேண்டாம் என சொல்லுவதற்கு பல வாய்ப்புகள் கிடைத்தும் சொல்லாமல், தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்த பிறகு, அது பிரச்சினையான பிறகுதான், டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை தமிழக அரசு வேண்டாம் என்றது. இதற்கும் தமிழக பாஜக தான் தீர்வு கொடுத்துள்ளது. மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து, நானும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் சந்தித்து இதுகுறித்து பேசியிருக்கிறோம்.

விரைவில் நல்ல முடிவு வரும். திமுக இத்தனை எம்.பி.க்கள் வைத்திருந்தாலும், அவர்களை அரசியலுக்காக தான் பயன்படுத்துகிறார்களே தவிர, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்காக அவர்களை பயன்படுத்தவில்லை. டங்ஸ்டன் விவகாரத்தை மாநில அரசு இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும். போட்டி மனப்பாண்மையோடு மட்டுமே திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. மாநில அரசு நிறைய விஷயங்களை சரியாக கையாள்வதில்லை. மத்திய அரசின் நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு அதிகம் வருகிறது. அதை பிரச்சினையில்லாமல் சரிசெய்து கொடுக்க வேண்டியது அவர்களது கடமை. மாநில அரசின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். தமிழகத்துக்கு இன்னும் பல லட்சம் கோடி முதலீடுகள் வர வேண்டுமென்றால், தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.