இந்து’ குழுமம் சார்பில் கர்னாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் ரூ. 1 லட்சத்துக்கான பணமுடிப்பை வழங்க தடையில்லை எனக் கூறியுள்ள இரு நீதிபதிகள் அமர்வு, இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
கர்னாடக இசையில் சிறந்து விளங்கும் இசைக் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி சார்பில் ஆண்டு தோறும் ஒரு கலைஞர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய ‘சங்கீத கலாநிதி’ விருதும், பாராட்டுப் பத்திரமும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
‘மியூசிக் அகாடமி’ சார்பில் வழங்கப்படும் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்வு செய்யப்படும் அதே இசைக் கலைஞருக்கு,‘இந்து’குழுமம் சார்பிலும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் ரூ. 1 லட்சத்துக்கான பண முடிப்பு கடந்த 2005-ம் ஆண்டு முதல் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக் கான (2024) ‘சங்கீத கலாநிதி விருது மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பண முடிப்புக்கு பிரபல கர்னாடக இசைக் கலைஞரான டி.எம். கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டி.எம். கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பணமுடிப்பு வழங்கக்கூடாது என தடைகோரி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் ஸ்ரீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தனி நீதிபதி உத்தரவு: அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதியான ஜி. ஜெயச்சந்திரன், ‘‘கர்னாடக இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘மியூசிக் அகாடமி’ சார்பில் ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்குவதற்கோ அல்லது ‘ இந்து குழுமம்’ சார்பில் ரூ.1 லட்சம் பண முடிப்பு வழங்குவதற்கோ எந்த தடையும் இல்லை. ஆனால் இந்து குழுமம் சார்பில் வழங்கப்படும் ரூ.1 லட்சம் பண முடிப்பை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் வழங்கக்கூடாது, என கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மியூசிக் அகாடமி மற்றும் ‘இந்து’ குழுமம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது மனுதாரரான ஸ்ரீனிவாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரநாரா யணன், வி.ராகவாச்சாரி ஆகியோரும், மியூசிக் அகாடமி சார்பில் மூத்த வழக்கறிஞர் டி.மோகனும், ‘இந்து’ குழுமம் சார்பி்ல் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், டி.எம்.கிருஷ்ணா தரப்பில் வழக்கறிஞர் சுக்ரீத் பார்த்தசாரதியும் ஆஜராகி வாதிட்டனர்.
பணமுடிப்பு வழங்க தடையில்லை: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இந்து’ குழுமம் சார்பில் கர்னாடக இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் ரூ. 1 லட்சத்துக்கான பணமுடிப்பை வழங்க தடையில்லை எனக்கூறி, இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.