தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பேராசிரிய பதவி, கலாநிதி பட்டம் பொறியிலாளர், வைத்தியர் போன்ற பதவி பெயர்கள் உள்ளிட்ட கல்வி தரம் தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு பாராளுமன்றத்துக்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய கட்சி மற்றும் புதிய ஜனநாயக முன்னணி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற குழு தலைவர் ஜீவன் தொண்டமான் இந்த பிரேரணையை பாராளுமன்றத்துக்கு முன்வைக்க இருக்கிறார். சபாநாயகர் அசோக்க ரன்வலவின் கலாநிதி பட்டம் மேலும் அமைச்சர் ஒருவரின் பொறியியலாளர் பதவி தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சையை கருத்திற்கொண்டு, குறித்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ளும் நோக்கில் இந்த பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பது தொடர்பான பிரேரணையை முன்வைக்க இருப்பதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
சபாநாயகர் அசோக்க ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு சபாநாயகராே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினாலோ ஏற்றுக்கொள்ள முடியுமான பதில் ஒன்று இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அதனாலே பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கும் பிரேரணையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.