யாழில் கஞ்சாவுடன் கைதானவர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில்!

17 0

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான இருவரையும் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஷாலினி ஜெயபாலச்சத்திரன் அனுமதித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை (12) காலை எரிபொருள் முடிவடைந்த நிலையில் படகொன்று கரையொதுங்கியுள்ளது.

படகு சந்தேகத்துக்கு இடமான முறையில் காணப்பட்டமையால் அதனை புலனாய்வாளர்கள் சோதனையிட்டபோது, 92 பொதிகளில் 213.899 கிலோ கிராம் கேரள கஞ்சா படகினுள் காணப்பட்டது.

அதனையடுத்து, படகில் வந்த இருவரையும் கைது செய்து, படகில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று (12) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் பொலிஸார் முற்படுத்தினர்.

அதன்போது, சந்தேக நபர்களிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால், அவர்களை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வேண்டும் என பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட பதில் நீதவான் இருவரையும் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கினார்.