சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரேநாளில் 7 புறப்பாடு, 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு கொச்சி செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 10.50 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமுகா செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12.35 மணிக்கு சிலிகுரி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், பகல் 1.55 மணிக்கு இலங்கை யாழ்ப்பாணம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் என 7 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல், சென்னைக்கு காலை 10.20 மணிக்கு வரவேண்டிய கொச்சி ஸ்பைஸ்ஜெட் விமானம், பகல் 1.45 மணி – திருவனந்தபுரம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 3 மணி – மதுரை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5.10 மணி – யாழ்ப்பாணம் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5.55 மணி – கர்நாடக மாநிலம் சிவமுகா ஸ்பைஸ்ஜெட் விமானம் மற்றும் இரவு 10.05 மணிக்கு வரவேண்டிய கொல்கத்தா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் என 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் ஒரேநாளில் 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்த 13 விமானங்களில் 9 விமானங்கள் நிர்வாகக் காரணம், 2 விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு, 2 விமானங்கள் மோசமான வானிலையால் ரத்து செய்யப்பட்டதாக சென்னை விமான நிலையம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெங்களூருவில் தரையிறக்கம்: சென்னையில் நிலவிய மோசமான வானிலையால், டெல்லியில் இருந்து வந்த விமானம் பெங்களூருவில் தரையிறங்கியது. டெல்லியில் இருந்து 152 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்க நேற்று காலை 10 மணிக்கு வந்தது. அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து மோசமான வானிலை நிலவியதால், விமானம் தரையிறங்குவது பாதுகாப்பாக இருக்காது என்பதைக் கருதிய விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு விவரத்தை தெரிவித்தார்.
இதையடுத்து, விமானத்தை பெங்களூருக்கு திருப்பிச் செல்லுமாறு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி, விமானம் பெங்களூரு சென்று தரையிறங்கியது. வானிலை சீரானதும், விமானம் அங்கிருந்து சென்னை வந்து பின்னர் தரையிறங்கியது. இதனால், காலை 10.45 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட வேண்டிய விமானம், மதியம் 1 மணிக்கு புறப்பட்டது. அதேபோல், மங்களூரில் இருந்து நேற்று காலை 10:40 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலையால் பகல் 11.40 மணிக்கு சென்னை வந்தடைந்தது.