ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டியெழுப்பிய நிறுவனங்களை மீளவும் செயற்படுத்த வேண்டியது அவசியம்

17 0

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத்தில் துறைசார் மேற்பார்வைக்குழுக்கள்  முறைகள் வேண்டுமென்றே இரத்து செய்யப்பட்டுள்ளமையானது துரதிஷ்டவசமானதாகும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஆலோசகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி, நாட்டின் சிவில் சமூகம் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கோட்பாடுகளை பாதுகாக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுதந்திரத்திற்கு பின்னரான வரலாற்றில் ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையிலான அணுகுமுறைகளை பாதுகாப்பதற்கு மேற்கொண்ட  அர்ப்பணிப்பு இலங்கைக்கு பெருமை சேர்த்தது .

பல்வேறு பின்னடைவுகளுக்கு மத்தியிலும் நாம் அதனை பாதுகாத்து உள்ளோம். ஜனநாயகத்தையும் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் அந்தக் கொள்கைகள் புதிய அரசாங்கத்தினால் மேலும் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

ஜனநாயகத்தை பெரிதும் போற்றும் ஆட்சியில் எதிர்க்கட்சிக்கு பாரிய மேற்பார்வை கடமை உள்ளது. அதற்கு அமைவாக 8 வது பாராளுமன்றத்தில் 2015 –  2020 காலகட்டத்தில் மேற்படி கோட்பாடுகளுக்கு மரியாதை அளித்து எதிர்க்கட்சிக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய கோப், கோபா, நிதி குழு போன்ற மேற்பார்வை குழுக்களுக்கு பாரிய கடமைகள் வழங்கப்பட்டிருந்தது. அந்த கடமை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அப்போது சுனில் ஹதுன்நெத்தி பாராளுமன்ற உறுப்பினர் கோப் குழுவின் தலைவராக பாரிய கடமையை ஆற்றியதை நினைவுபடுத்த வேண்டும். அவர் தலைமை வகித்த அந்த குழுவின் பெரும்பான்மை அதிகாரம் ஆளும் கட்சியை சார்ந்திருந்தது.

தலைமைத்துவத்தை எதிர்க்கட்சி உறுப்பினர் வகிப்பது அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தடையாக அமையாது என்பதற்கு அது சிறந்த முன்னுதாரணமாகும். ஆகையால் தேவையற்ற பயத்தை ஏற்படுத்திக் கொள்வது நியாயம் இல்லை.

கோப் குழுவின் தலைமை பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம் . நாட்டின் மக்கள் எதிர்பார்க்கும் விதத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் இடம்பெற்றால் அந்த நம்பிக்கை உறுதி செய்யப்படும்.

அதேபோன்று துறைசார் மேற்பார்வை குழுக்களின் ஊடாக நாட்டின் நலனுக்கு பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டது. அனைத்து கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் அதன் ஊடாக உறுதி செய்யப்பட்டது.

ஆனாலும் துரதிஷ்டவசமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இந்த முறைகள் வேண்டுமென்றே இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அன்று எதிர்க்கட்சிகள் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து இந்த செயற்பாடுகளுக்கு எதிராக முன்வந்தது. ஆனாலும் 21ஆவது திருத்தத்தை 2023 ஆம் ஆண்டில் கொண்டு வந்ததற்கு பின்னர் , இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு செயற்பட்டு வந்தது. அந்த காலகட்டத்தில் இந்த குழுக்கள் பாரிய பங்களிப்பை வழங்கியது என்பது பெரும்பான்மை கருத்தாகும்.

மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வந்த துறைசார் மேற்பார்வை குழுக்கள் தொடர்பில் மீண்டும் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

உயரிய அளவில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பல நாடுகளில் இந்தக் குழு முறை செயல்பட்டு வருவதுடன்,  இலங்கை பாராளுமன்றத்தின் குழுக்களுடன் வெளிநாட்டு பாராளுமன்ற உயர் மட்டங்கள் ஒத்துழைப்புடன் செயல்பட்ட வரலாறும் இலங்கைக்கு உள்ளது. அது இலங்கை பாராளுமன்றத்திற்கு பாரிய வலுவாக அமைந்தது.

துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு பதிலாக மற்றொரு மாதிரியை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டால் அதன் ஊடாக பாரிய சிக்கல்கள் தோற்றுவிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். துறைசார் மேற்பார்வை குழுக்கள் தொடர்பில் நாம் கையாண்ட முதலாவது சோதனையின் போது சர்வக் கட்சி பிரதிநிதித்துவத்தை கையாண்டோம்.

கடந்த கால பாராளுமன்ற செயற்பாடுகளின் போது இளைஞர்களுக்கும் அதில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த முறை இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றது. இதற்காக வினைத்திறனாகவும் முன்மாதிரியாகவும் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆர்வத்தை இந்த நேரத்தில் பாராட்ட வேண்டியுள்ளது.

மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டே நாம் இதனை வலியுறுத்துகின்றோம். பெரும்பான்மை மக்கள் ஆணையைப் பெற்ற ஜனாதிபதி யும் அவர் தலைமைத்துவம் வழங்கிய தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் வாக்களித்தது ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று அவர் அளித்த வாக்குறுதிக்கு மதிப்பளித்தே என்பதை நினைவுபடுத்துகின்றோம்.

சிவில் சமூகமாகிய எமக்கும் அந்த நம்பிக்கை இருக்கின்றது. ஏதேனும் விதத்தில் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் மக்களின் நம்பிக்கை சிதைவதற்கும் அரசாங்கத்தின் நட்பெயருக்கு பங்கம் ஏற்படுவதற்கும் அது காரணமாக அமையக்கூடும்.

1990 களில் ஏற்பட்ட ஜனநாயக சீர்திருத்தங்களின் ஊடாக அரசியல் மயமாக்கப்பட்ட அரச இயந்திரத்தை காத்ததும், நீதியான சமூகத்தை உருவாக்குவதற்கு அடித்தளம் வகுத்ததும், சுயாதீனமான தேர்தல்களை நடத்தியதும் 17 வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான தலைமைத்துவத்தை சிவில் சமூகங்களே வழங்கியது. சட்டவாக்க சபை, சுயாதீன ஆணை குழுக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைப்பதற்கும் இந்த முயற்சி காரணமாக அமைந்தது.

இதற்கு தலைமைத்துவம் வழங்கிய பல்வேறு சிவில் சமூக பிரஜைகள் தற்போது உயிருடன் இல்லை. 2001 இல் மக்கள் விடுதலை  முன்னணி சந்திரிகா பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியது 17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே ஆகும்.

இரண்டு முறைகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பின்னர் கொண்டுவரப்பட்ட 18 மற்றும் 20 ஆகிய திருத்தங்களின் ஊடாக இந்த எண்ணக்கரு முற்றுமுழுதாக அளிக்கப்பட்டது.

நாம் மீண்டும் மீண்டும் அவற்றை வலியுறுத்துவது இந்த கட்சி ஜனநாயக சீர்திருத்தங்களுக்காக வழங்கிய பங்களிப்பை கருத்தில் கொண்டே ஆகும். ஆகையால் இதயசுத்தியுடன் நாங்கள் முன்வைக்கும் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு சாதூர்யமான முடிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

சிவில் சமூகத்திற்கு அரசியல் அதிகாரம் இல்லாவிட்டாலும் சமூக பலம் உண்டு. உங்களது எதிர்கால பயணத்திற்கு அவற்றின் வலுவையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள் என்று நம்புகிறோம்.