உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் வகையில் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை!

16 0

புதிய இளைஞர்கள் வாக்காளர்கள் வாக்களிக்க கூடிய வகையில் 2024 ஆம் ஆண்டு அத்தாட்சிப்படுத்தப்பட்ட தேருநர்  இடாப்பினை பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் வகையில் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

2024 ஆண்டு அத்தாட்சிப்படுத்தப்பட்ட தேருநர் இடாப்பினை பயன்படுத்தி உள்ளுராட்சிமன்றத்தேர்தலை நடத்தும் உத்தரவை பிறப்பிக்குமாறு வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று செவ்வாய்க்கிழமை (10)  பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் மன்றுக்கு இதனை தெரிவித்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரதம நீதியரசர் முர்து  பெர்னாந்து , அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாந்து ஆகிய அமர்வு முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஷ்வரன், புதிய இளைஞர்கள் வாக்காளர்கள் வாக்களிக்க கூடிய வகையில் 2024 ஆம் ஆண்டு அத்தாட்சிப்படுத்தப்பட்ட தேருநர் இடாப்பினை பயன்படுத்தி உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தும் வகையில் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக இதுவரையில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்டத்தை திருத்தம் செய்யுமாறும் அமைச்சரவை ஆலோசனை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதன்போது மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இந்த வழக்கு மிகவும் முக்கியமானது எனத்தெரிவித்ததுடன் அனைத்து தரப்பினரும் இதில் தலையீடு செய்யும்  வகையில்  இந்த வழக்கு தொடர்பான செய்திகளை மூன்று பிரதான மொழிகளிலும் வெளியிடும் உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு அனுமதி வழங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டவர்களுக்கு இந்த அறிவிப்பை விடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்தது.

தேச விமுக்தி மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்ததுடன் இந்த மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.