இலங்கை மின்சார சபை 150 பில்லியன் ரூபா இலாபம் பெற்றுள்ள நிலையில் மின்சார கட்டணம் குறைக்க முடியாது என தெரிவிப்பதற்கான காரணம் என்ன?
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான விலை சூத்திரத்தின் பிரகாரம் செயற்பட்டால் மக்கள் இதுதொடர்பில் அலட்டிக்கொள்ளப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (10) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் 6மாதங்களுக்கு மின்கட்டணம் குறைக்க முடியாது என இலங்கை மின்சாரசபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருக்கிறது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பில் மின்சாரசபையிடம் மூன்று தடவைகள் கோரியிருந்த நிலையிலேயே தற்போது இந்த அறிவிப்பை மின்சாரசபை தெரிவித்திருக்கிறது.
ஆனால் இலங்கை மின்சாரசபை இந்த வருடத்தில் 150 பில்லியன் ரூபா இலாம் அடைந்துள்ளதாக கணக்கு பார்த்து தெரிவித்திருக்கிது. இந்நிலையில் மின் கட்டணம் குறைக்க முடியாமைக்கு தெரிவிக்கும் காரணம் நியாயமானதல்ல.
அதாவது அடுத்த வருடம் இந்த வருடம்போன்று நீர் மின்சாரம் கிடைக்கப்போவதில்லை. அதனால் மின் பாவனை அதிகரிக்கும்.
இதன்போது மின் அலகுகள் ஆயிரம் வரை மேலதிகமாக அதிகரிக்கும் இதன்போது மின்சாரசபைக்கு மேலதிகமாக 20 பில்லியன் ரூபா செலவிட வேண்டிவரும்.
அதனால் அடுத்த வருடம் ஏற்படப்போகும் நட்டத்தை ஈட்டிக்கொள்வதற்காக இந்த வருடம் கிடைத்த லாபத்தை வைத்துக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது. இது சிறுபிள்ளைத்தனமான கற்பனை கதையாகும். இவர்களின் இந்த அறிவிப்பு நியாயமானதா என கேட்கிறோம்.
அத்துடன் மின் கட்டண திருத்தம் தொடர்பில் விலை சூத்திரம் ஒன்று இருக்கிறது. அதன் பிரகாரம் மின்சாரசபை லாபமடையும்போது மின் கட்டணம் குறைக்கப்படும்.
நட்டமடையும்போது மின்கட்டணம் நியாயமான முறையில் அதிகரிக்கப்படும். இது மக்களுக்கு தெரியும். அதனால் மக்கள் குழப்பமடைவதில்லை.
ஆனால் 150 பில்லியன் இலாபம் பெற்றுள்ள நிலையில் மின் கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவிப்பது மக்களுக்கு செய்யும் அநியாயமாகும்.
அதேநேரம் தேர்தல் மின் கட்டணத்தை நூற்றுக்கு 30 வீதம் குறைப்பதாகவும் அதிகாரத்துக்கு வந்ததுடன் அதனை முன்னெடுப்பதாகவுமே இவர்கள் தேர்தல் மேடைகளில் தெரிவித்து வந்தனர்.
பொருளாதார நெருக்கடி நிலையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தார். என்றாலும் மக்களுக்கு அதனை தாங்கிக்கொள்ள முடியாது என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
அதனால் குறுகிய காலத்தில் மின் கட்டணத்தை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இரண்டு கட்டங்களில் மின்சார கட்டணம் குறைக்கப்பட்டது.
என்றாலும் அதிகரிக்கப்பட்ட அளவுக்கு வரமுடியாமல் போனது. அப்போதுதான் அநுரகுமார திஸாநாயக்க நூற்றுக்கு 30 வீதம் மின் கட்டணத்தை குறைப்பதாக தெரிவித்தார். ஆனால் தற்போது இது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மெளனமாக இருந்து வருகிறார்.
அதனால் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் மின் கட்டணத்தை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.