சீன விஜயத்தின் போது குரங்குகள் குறித்த இராஜதந்திர பேச்சுக்களை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும்

22 0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது சீன விஜயத்தின் போது குரங்குகள் தொடர்பில் எமது அரசாங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் குரங்குகளால் விவசாயத்துக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு ஓரளவேனும் தீர்வு காண முடியும் என முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எமது ஆட்சி காலத்தில் குரங்கு பிரச்சினை ஏற்பட்ட போது, சீன பிரதிநிதிகள் குழுவொன்றுடன் 3 பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதன் போது ஒரு இலட்சம் குரங்குகளை தமக்கு வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். சீனாவிலுள்ள ஆயிரக்கணக்கான தனியார் மிருககாட்சி சாலைகளுக்கு வழங்குவதற்காகவே அவர்களால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது குறித்த ஆவணங்கள் கூட பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. எவ்வாறிருப்பினும் சூழலியலாளர்கள் நீதிமன்றம் சென்றதால் எம்மால் அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விரைவில் சீனா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின் போது இவ்விடயம் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

சீனாவுக்கு குரங்குகளை வழங்கும் அதேவேளை, விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஏனைய வன விலங்குகளை ஏனைய நாடுகளுக்கு வழங்க முடியும். இதன் ஊடாக இந்த பிரச்சினையிலிருந்து விடுபட முடியும் என்பதோடு, ஏனைய நாடுகளுடன் நட்புறவையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

அதேவேளை சூழலியலாளர்களும் இதற்கான தீர்வினை வழங்குவது குறித்து அரசாங்கத்துடன் துரித பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.

குரங்குகளால் வருடத்துக்கு சுமார் 20 மில்லியன் தேங்காய்கள் இழக்கப்படுகின்றன. அதேபோன்று மயில்களால் நெற் பயிர் செய்கைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத்துக்கு வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்துக் கொண்டால் நாட்டில் அரிசி உள்ளிட்டவற்றுக்கு ஏற்படும் பாதிப்புக்களையும் குறைத்துக் கொள்ள முடியும் என்றார்.