அரசாங்கம் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் : ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்

24 0

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதும், சகலரும் அதற்கு மதிப்பளிப்பதை உறுதிப்படுத்துவதும் அத்தனை இலகுவான விடயமல்ல எனவும் சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ், மக்கள் மத்தியில் அரசாங்கம் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் ஊடாகவே அதனைச் செய்யமுடியும் எனத் தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான செவ்வாய்க்கிழமை (10) அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் அறிமுகப்படுத்தப்பட்டு 76 வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதை நினைவுகூரும் விதமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் ‘ஏ’ தரத்தைப் பெற்றுக்கொண்டமை குறித்தும், ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு கிளை அலுவலகத்துடன் இணைந்து ஆணைக்குழு முன்னெடுத்துவரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்தும் தனது பாராட்டினை வெளிப்படுத்திய ஐ.நா வதிவிடப்பிரதிநிதி, அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் உருவாக்கத்தை நினைவுகூரும் அதேவேளை, அப்பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ள உரிமைகளின் முக்கியத்துவம் பற்றியும் சிந்தித்து செயலாற்றவேண்டும் என வலியுறுத்தினார்.

அதுமாத்திரமன்றி உலகிலேயே தமிழ் மற்றும் சிங்களம் உள்ளடங்கலாக 500 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஓர் ஆவணமாக இந்த அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் காணப்படுவதாகவும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள உரிமைகளில் பலவற்றை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி மேலும் வலுவான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டியிருப்பதாகவும் மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் சுட்டிக்காட்டினார்.

‘இலங்கையைப் பொறுத்தமட்டில் மனித உரிமைகள் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பல் என்பவற்றை முன்னிறுத்தி கடந்த சில மாதங்களாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை வரவேற்கின்றோம்.

அதேவேளை நாட்டின் பொருளாதார மீட்சிக்கும், வளர்ச்சிக்கும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியமாகும். குறிப்பாக இக்காலப்பகுதியில் பின்தங்கிய மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவினரின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களை இலக்காகக்கொண்ட சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை வலுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இலங்கை அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களைத் தாம் வழங்கிவருவதாகக் குறிப்பிட்ட ஐ.நா வதிவிடப்பிரதிநிதி, நாட்டில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதும், சகலரும் அதற்கு மதிப்பளிப்பதை உறுதிப்படுத்துவதும் அத்தனை இலகுவான விடயமல்ல எனவும், மக்கள் மத்தியில் அரசாங்கம் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் ஊடாகவே அதனைச் செய்யமுடியும் எனவும் கூறினார்.