அனைத்து துறைகளுக்கும் எமது பூரண ஆதரவு

29 0

இலங்கை மற்றும் சீன அரசுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நட்புறவு மிகவும் வலுவான நட்புறவாகும். சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பை சுகாதாரத் துறைக்கு மாத்திரமின்றி இந்நாட்டின் அனைத்து துறைகளுக்கும் வழங்கி வருகிறோம். எதிர்வரும் காலங்களிலும் அனைத்து துறைகளுக்கும் எமது பூரண ஆதரவை வழங்க தயாராக உள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) சுகாதார அமைச்சரிடம் உறுதியளித்தார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) ஆகியோருக்கிடையில் சுகாதார அமைச்சில் நேற்று திங்கட்கிழமை (09)ஆம் திகதி இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை மற்றும் சீன அரசுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நட்புறவு மிகவும் வலுவான நட்புறவாகும். சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பை சுகாதாரத் துறைக்கு மாத்திரமின்றி இந்நாட்டின் அனைத்து துறைகளுக்கும் வழங்கி வருகிறோம்.

எதிர்வரும் காலங்களிலும் அனைத்து துறைகளுக்கும் எமது பூரண ஆதரவை வழங்க தயாராக உள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் சுகாதார அமைச்சரிடம் உறுதியளித்தார். மேலும் நாட்டு மக்களுக்கு குறைந்த செலவில் உயர் தரத்துக்கமைய சுகாதார சேவையை வழங்குவதற்காக சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதவள வேலைத்திட்டங்கள் தொடர்பில் சீன அரசாங்கத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார்.

இலங்கை எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் அதை முறியடிப்பதற்கு சீன அரசாங்கம் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.

இம்மாதம் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள சீன கடற்படையின் மருத்துவமனை கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு கப்பலில் வருகை தர உள்ள விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார சேவை குழுவினர் நாட்டில் உள்ள நோயாளர்களுக்கும் சிகிச்சைகளை வழங்க எதிர்பார்த்துள்ளனர் என்றார்.

இதேவேளை வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ சுகாதார அமைச்சராக கடமையேற்றதன் பின்னர் இலங்கைக்கான சீன தூதுவருடன் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும். இதன்போது சீன அரசாங்கத்தின் பங்களிப்புடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசேட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் சீன அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பை நினைவுக் கூர்ந்த சுகாதார அமைச்சர், பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபம், கொழும்பு தேசிய வைத்தியின் வெளிநோயாளர் பிரிவு கட்டிடம், பொலன்னறுவை சீன-இலங்கை நட்புறவு சிறுநீரக விசேட வைத்தியசாலை ஆகியவற்றை உருவாக்குவதற்கு பங்களித்த சீன அரசாங்கத்துக்கும் சீன மக்களுக்கும் தமது நன்றியை தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பின்போது சுகாதாரத் துறையின் எதிர்கால முன்னேற்றத்துக்கான முன்மொழிவுகளையும் சீன தூதுவர் சுகாதார அமைச்சரிடம் முன்வைத்திருந்தார்.

கலந்துரையாடலில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் வத்சலா பிரியதர்ஷனி உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகளும், சீன தூதரக அதிகாரிகளும் கலந்துக் கொண்டிருந்தனர்.