கேணல் பருதி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவுசுமந்து மதிப்பளிப்பு!

52 0

பிரான்சில் கேணல் பருதி அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவுசுமந்து புலம்பெயர் மண்ணில் உயர்கல்வியை முடித்துப் பட்டம்பெற்ற தமிழ் மாணவ மாணவியர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு புளோமெனில் பகுதியில் நேற்று (08.12.2024) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவரும் இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழ்ப்பெண்கள் அமைப்பின் பொருளாளர் திருமதி வலன்ரீனா அவர்கள் ஏற்றிவைக்க, கேணல் பருதி அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 09.01.1997 அன்று ஆனையிறவு – பரந்தன் பகுதியில் இடம்பெற்ற சமரில் வீரச்சாவடைந்த கப்டன் சுபாநந்தினி அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

தமிழ் பெண்கள் அமைப்பு – பிரான்சு பொறுப்பாளர் திருமதி ஜெனனி ஜெயதாஸ் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நுவாசிலுகுரோன் தமிழ்ச்சோலை, நுவாசிலு செக் தமிழ்ச்சோலை,, ஒள்னேசுபுவா தமிழ்ச்சோலை, புளோமெனில் தமிழ்ச் சோலை ஆகிய மாணவிகள் வழங்கிய எழுச்சி நடனங்கள், வில்பந் தமிழ்ச் சோலை மாணவியின் கேணல் பரிதி அண்ணா நினைவு சுமந்த கவிதை, தமிழர் கலை பண்பாட்டுக் கழக உறுப்பினர் முகுந்தன் அவர்களின் கேணல் பரிதி அண்ணா நினைவு சுமந்த கவிதை, தமிழர் கலை பண்பாட்டுக் கழக கலைஞர்களாக கிருபா, சூரியா ஆகியோரின் மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள் என்பன கலை நிகழ்வுகளாக இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு நிர்வாக செயற்பாட்டாளர் திரு.சத்தியதாசன் அவர்கள் வழங்கியிருந்தார். அவர் தனது உரையில், கேணல் பரிதி அவர்களின் வாழ்வியல் பற்றியும் இன்றைய நாளில் மதிப்பளிக்கப்பட்ட மாணவர்களை வாழ்த்தியதுடன், இவர்கள் தேசியப் பணிகளில் தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்பதாக அவருடைய உரை அமைந்திருந்தது.
உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரான்சு மண்ணில் உயர்கல்வியை முடித்து பல்வேறு துறைகளிலும் பட்டம்பெற்ற 22 தமிழ் மாணவ மாணவியர் மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான மதிப்பளித்தலை தமிழ்ப்பெண்கள் அமைப்பு – பிரான்சு உறுப்பினர்கள் வழங்கியிருந்தார்கள்.

முதல் பிரிவில்:-
உருத்திரகுமாரன் மீனா, ருத்ரா ருசியா, ரஞ்சன் திருத்தி, கோபிராஜ் நிலா, யோகானந்தராஜா துளசி, கணேசநாதன் கிரிசிகா, ரதிஸ்லஸ் கொலஸ்ரிகா, லிங்கேஸ்வரன் மெதுவா, மகேஸ்வரன் நிதீபன், பாக்கியநாதன் அர்ச்சுதாயினி , திலீப்குமார் திசானிக்கா

இரண்டாவது பிரிவில்:-

ஜெயச்சந்திரன் ஜெயோலின், சுபாஸ்கரன் மெலிசா, சத்தியநாதன் குயிலிக்கா, நேசராசா சங்கீர்த்தனன், உபைதுல்லா பாத்திமா, திலீப்குமார் தானுகா, பத்மநாதன் றிஜிதா, ஜெயசீலன் நிசாந்தினி, கலிஸ்டஸ் சுரேஸ் ஸ்ரெனிசியா, சுந்தரலிங்கம் வேதிகா, ரதிஸ்லஸ் லடிஸ்கா

ஆகிய மாணவர்கள் சான்றிதழ், நினைவுப்பதக்கம் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பினரால் ஆண்டு தோறும், பிரான்சு தேசத்தில் பிறந்து படித்து பட்டம் பெற்ற எம் தேசக்குழந்தைகளை எமது தமிழ்சார் உலகத்திற்கு வெளிக்காட்டும் ஓர் உன்னதப்பணியான இந்நிகழ்வு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடாத்தப்பட்டு வருகின்றது.

இம்முறை 22 பிள்ளைகள், அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் முறையே வைத்தியர்கள், பொறியியல், சட்டம், கணக்காய்வாளர், ஆசிரியர்கள், மற்றும் பிரான்சு நாட்டின் பல்வேறு துறைகளில் பட்டம் பெற்று பணிபுரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பலர் வளர் தமிழ் 12 வரை தமிழ்ச் சோலைப் பள்ளிகளில் கற்றவர்கள் என்பதுடன், கலைப் பாடங்களிலும், தமிழ்ப் பட்டயக் கல்வியிலும் மேற்படிப்பை தத் தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவர்களின் சார்பில் மகேஸ்வரன் நிதீபன் அவர்கள் தமக்கு மதிப்பளித்தலை மேற்கொண்ட அனைவருக்கும் தமது நன்றியறிதலை வெளிப்படுத்தியிருந்தார்.

நிகழ்வினை பிரதம அறிப்பாளர் திரு. வினோஜ் அவர்கள் அழகாகத் தொகுத்து வழங்கியிருந்தார்.

நிறைவாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடல் ஒலித்து ஓய்ந்ததும் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு கண்டது.

(தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு –ஊடகப்பிரிவு.)