கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதல்களை பார்த்தால் போர் சூழல் போல் காணப்படுகிறது என்றும் ஆனால் மதத்தை அதற்கு குறை சொல்லக் கூடாது என்றும் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். மேற்குலகின் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து போப் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார். போலந்து நாட்டிற்கு ஐந்து நாள் பயணமாக விமானத்தில் சென்று கொண்டிருந்த போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மதம் தொடர்பான போர் இது கிடையாது. மக்கள் மீதான் ஒடுக்கு முறை மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்த ஏதேனும் ஒன்று போருக்கான காரணமாக இருக்கலாம். உலகம் தொடர்ச்சியாக பாதுகாப்பற்றதாக இருக்கிறது. ஆனால் உண்மையான உலகம் போர் சூழல் நிறைந்து காணப்படுகிறது. உண்மை குறித்து பேச நாம் பயப்பட்டு கொண்டிருக்க கூடாது. உலகம் போரினால் சூழப்பட்டுள்ளது. ஏனெனில் அது அமைதியை இழந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.