அழிவடைந்த வேளான்மைக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும், அனுமதியின்றி வெட்டப்பட்ட வாய்க்காலை மூடுமாறும் கோரி மூதூர் – பச்சனூர் சந்தியில் இன்று திங்கட்கிழமை (09) விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூதூர் கமநல சேவைப் பிரிவில் உள்ள சம்மேளனங்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மூதூர் கங்குவேலி திருக்கரைசை விவசாய சம்மேளனப் பிரிவில் எவருடைய அனுமதியுமின்றி புதிய வாய்க்கால் தோண்டப்பட்டது.
இதனால் கங்குவேலி குளத்திலிருந்தும், மேட்டுநில பரப்பிலிருந்தும் மேலதிக நீர் தமது வேளாண்மை நிலங்களுக்குள் புகுந்தது.
இதன் காரணமாக மூதூர் கமநல சேவை பிரிவில் சுமார் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மை அழிவடைந்துள்ளதாகவும் இதற்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வெள்ளத்தினால் தோண்டப்பட்ட வாய்க்காலை மூடுமாறும் ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.