நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதோடு அந்த அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையிலிருந்து ஆரம்பமாகுமா இல்லை முழுமையாக ஆரம்பத்திலிருந்தான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா என்றும், மூன்று ஆண்டுகள் காலம் தாழ்த்தப்படுகின்றபோது அச்செயற்பாட்டுக்கு எதிரான எதிர்ப்புக்கள் வலுவடையும் சவாலான நிலைமைகள் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாளவுள்ளீர்கள் என்றும் வினவியவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில்,
2015-2019 அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் இருந்து தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மையப்படுத்திய புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். அதனை நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டுள்ளோம்.
இருப்பினும், அந்த இடைக்கால அறிக்கையை விடவும் முற்போக்கான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமாக இருந்தால் நாம் அதுபற்றி கலந்துரையாடுவதற்கு தயாராகவே உள்ளோம்.
எவ்வாறாக இருந்தாலும் 22திருத்தங்கள் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்ற விடயத்தில் நாம் உறுதியாக உள்ளோம்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் எமது அமைப்பின் கொள்கைகளை மையப்படுத்திய விடயத்தினை முன்வைப்போம். அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதவில்லை.
எமது முன்மொழிவுகள் தீர்வினை அடைவதற்கான ஒரு பயணப்பாதையாகும். சிலதரப்பினர் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து அந்த வழியால் தீர்வினை அடையலாம் என்ற குறிப்பிடுகின்றார்கள்.
நாட்டில் அனைத்துப் பிரஜைகளும் சம அந்தஸ்துடன் சாந்தியும் சமாதானமுமாக வாழ வேண்டும். வளங்கள் சமமாக பகிரப்பட வேண்டும் என்பது தான் இலக்காக உள்ளது. அதனை அனைவரினதும் பங்களிப்புடன் அடைந்து கொள்வது தான் நோக்கமாக உள்ளது.
இதேநேரம், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றபோது 13ஆவது திருத்தச்சட்டம் மட்டுமல்ல முதலாவது திருத்தத்திலிருந்து 22ஆவது திருத்தம் வரையில் அகற்றப்பட்டு அவற்றின் உள்ளடக்கங்களைக் கொண்டதொரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
அதேநேரம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் மாகாண சபை முறைமை நீக்கப்படாது. நாட்டில் யுத்தமொன்று இடம்பெற்றது.
பல தசாப்தங்களாக இனங்களுக்கு இடையிலான பிரச்சினை நீடித்துக்கொண்டு தான் உள்ளது. அதற்கான தீர்வு வழங்கப்படும் வரையில் மக்களிடத்திலிருந்து வெளிவருகின்ற கோசங்கள் ஓயப்போவதில்லை.
எனவே எமது நோக்கம், அனைவரினது இணக்கத்துடன் ஏற்படுத்தப்படுகின்ற தீர்வானது மக்களின் அங்கீகாரத்துக்காக விடப்படும். அதாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற நிலையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவோம்.
அதேநேரம், தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் இனவாதம், மதவாதத்தை பேசவில்லை. அவ்வாறு பேசுவதற்கு இடமளிக்கவும் இல்லை. வழக்கமாக ஆளும் தரப்பு தான் அவ்விதமான மனோநிலையில் செயற்படும்.
ஆனால் இம்முறை அவ்விதமான நிலைமை காணப்படவில்லை. ஆகவே இந்த மாற்றமானது, புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு சவால்களை அளிக்காது என்றே கருதுகின்றேன். நிச்சயமாக மக்கள் எதிர்பார்க்கின்ற முறைமை மாற்றமொன்று ஏற்படும் என்றார்.