நாட்டில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர்

12 0

கடந்த 75 வருடங்களில் நாடு பயணித்த திசையை மாற்றி ஆய்வுகள், சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நாட்டில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற டிஜிட்டல் நூலக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திக்கான முதலீடுகள் மிகவும் முக்கியமானது. அது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இவற்றில் முதலீடு செய்வதனாலேயே எமது இலக்கை விரைவாக அடைய முடியும் என்பதையும் நாம் அறிவோம்.

நாம் கடந்த பல வருடங்களாக பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம். குறிப்பாக உயர்மட்ட தீர்மானங்களை எடுக்கும்போது சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியாக தீர்மானங்களை எடுக்கவில்லை. உண்மையில் இந்த கட்டமைப்பை மாற்ற வேண்டும்.

எனவே, நாம் புதிய உற்பத்திகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் எமது முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். அதற்காக எமக்கு பலமான ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தித் துறைகள் அவசியமாகும்.

எனவே, கடந்த 75 வருடங்களில் நாடு பயணித்த திசையை மாற்றி ஆய்வுகள், சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நாட்டில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார்.

இந்நிகழ்வில் தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவர் பேராசிரியர் சமன் செனவீர, பணிப்பாளர் நாயகம் கலாநிதி செபாலிகா சுதசிங்க, தேசிய விஞ்ஞான நூலக வள நிலையத்தின் தலைவர் மஞ்சுள கருணாரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.