அரிசியின் விலை அதிகரிப்பு 1953ஆம் ஆண்டு ஹர்த்தாலுக்கு பிரதான காரணியாக அமைந்தது. தற்போதைய அரிசி தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் உடன் தீர்வு காண வேண்டும் இல்லையேல் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்பில் கவனம் செலுத்த ஜனாதிபதி விசேட திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சந்தையில் அரிசி மற்றும் தேங்காய் ஆகிய அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை நியாயமற்ற வகையில் உயர்வடைந்துள்ளதுடன், நவம்பர் மற்றும் டிசெம்பர் மாத காலப்பகுதியில் சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு தீவிரமடையும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கங்களும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
சந்தையில் அரிசியின் விலை நியாயமற்ற வகையில் உயர்வடைந்துள்ளது. அரிசிக்கான விலையை நிர்ணயித்து கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரிசி உற்பத்தியாளர்களே அரிசியின் விலையை தீர்மானித்துக் கொள்கிறார்கள்.
அரிசியின் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரிசியில் விலை அதிகரிப்பு 1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலுக்கு பிரதான காரணியாக அமைந்தது .
தற்போதைய அரிசி தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் உடன் தீர்வு காண வேண்டும். இல்லையேல் பாரிய நெருக்கடிகள் சமூக கட்டமைப்பில் ஏற்படும்.
மொத்த சனத்தொகையில் பெருமளவிலானோர் நாட்கூலி பெறுபவர்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை நிலையற்ற வகையில் காணப்பட்டால் இவர்கள் எவ்வாறு வாழ்வார்கள்.
ஆகவே அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி விசேட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்றார்.