இலங்கையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் அளித்துள்ள 300 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொதி, இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகாமை நிறுவனம் (JICA) ஆகியவை இணைந்து இலங்கை பிரதிநிதிகளிடம் நேற்று சனிக்கிழமை (07) கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிப் பொருட்களில் 230 கூடாரங்கள், 1,300 படுக்கை விரிப்புக்கள் மற்றும் 50 மீட்டர் நீளமுள்ள பிளாஸ்டிக் சீட்ஸ் 30 ரோல்கள் என்பன காணப்படுகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு இந்த உதவித்தொகை, அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் ஊடாக உடனுக்குடன் விநியோகம் செய்யப்படவுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசமடா மற்றும் JICAஇன் இலங்கை பிரதிநிதி டெட்சுயா யமடா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், ஜப்பானில் இருந்து விசேட சரக்கு விமானம் மூலம் இந்த உதவிப் பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.