“தமிழகம் கோரிய ரூ.37,906 கோடி நிவாரண நிதியில் மத்திய அரசு வழங்கியது ஒரு சதவீதம்கூட இல்லை” – அமைச்சர் தங்கம் தென்னரசு

28 0

“ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் கோரிய ரூ.37,906 கோடி நிவாரண நிதியில் மத்திய அரசு வழங்கியது ஒரு சதவீதம்கூட இல்லை” என மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, விருதுநகர் அருகே மல்லாங்கிணரில் உள்ள அவரது இல்லத்தில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக மத்திய அரசு தனது பங்களிப்பான ரூ.944 கோடியை நேற்று தமிழகத்துக்கு விடுவித்துள்ளது. இந்த நிதியானது, ஃபெஞ்சல் புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுவதைக் கருத்தில் கொள்ளாமல், ஒன்றிய அரசால் அனைத்து மாநிலங்களுக்கும் 15-வது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி சட்டபூர்வமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியாகும்.

கடந்த 2021-22-ம் ஆண்டில் மாநில பேரிடர் நிதிக்கான நிதி ரூ.1,088 கோடி. இதில் மத்திய அரசு பங்கு ரூ.816 கோடி. மாநில அரசின் பங்கு ரூ.272 கோடி. மொத்தம் ரூ.816 கோடி. மத்திய அரசு 2022-23-ம் ஆண்டில் மாநில பேரிடர் நிதிக்காக மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதி ரூ.1,142 கோடி. இதில், மத்திய அரசு ரூ.856.50 கோடியும், மாநில அரசின் பங்கு ரூ.285.50 கோடியும் என மொத்தம் ரூ.856.50 கோடி.

கடந்த 2023-24-ல் இதேபோன்று மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதி ரூ.1,200 கோடி. ஆனால், மத்திய அரசு விடுவித்துள்ள தொகை ரூ.900 கோடி. மாநில அரசு விடுவித்துள்ள தொகை ரூ.300 கோடி. மொத்தம் ரூ.900 கோடி. தற்போது 2024-25-ம் ஆண்டில் மத்திய அரசு விடுவிக்க வேண்டி நிதி ரூ.945 கோடி. அந்த தொகைதான் இந்த ரூ.944.80 கோடி. இது, கடந்த ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய நிதி. மத்திய அரசு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கான தனது பங்கான ரூ.944 கோடி ரூபாயை நேற்று தமிழகத்துக்கு விடுவித்துள்ளது.

மேலும், குறிப்பிட வேண்டுமென்றால், நடப்பு நிதியாண்டுக்கான முதல் தவணைத் தொகையின் விடுவிப்பு தாமதப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதி தற்பபோது டிசம்பர் மாதத்தில்தான் விடுவிக்கப்படுகிறது.

தமிழகம், குறிப்பாக தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதியை அனுமதிக்கக் கோரியுள்ளது. தேசியப் பேரிடர் நிவாரண நிதியமானது, பேரிடர்களால் பாதிக்கப்படும் மாநிலங்களின் நிவாரணம் மற்றும் மீட்புத் தேவைகளுக்கான நிதியை நிறைவு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். கடந்த நிதியாண்டில், மிக்ஜாம் புயல் மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அதி கனமழைப் பொழிவு ஆகிய இரண்டு பேரிடர்கள் ஏற்பட்ட பின்னரே, மிகச் சொற்பமான ரூ.276 கோடி ரூபாயை, தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ், அதுவும் 4 மாத தாமதத்துக்குப் பின்னரே ஒன்றிய அரசு அனுமதித்தது. இது, மாநில அரசு கோரிய ரூ.37,906 கோடியில் இது ஒரு சதவீதம்கூட இல்லை.

தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலானது உயிரிழப்புகளையும், வாழ்வாதார பாதிப்புகளையும் பெருமளவில் ஏற்படுத்திச் சென்றுள்ளது. தற்காலிக மற்றும் நிரந்தர நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ரூ.6.675 கோடி ரூபாய் தேவைப்படும் என ஆரம்பகட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலானது ஏற்படுத்தியுள்ள பேரழிவுகளைக் குறிப்பிட்டு, நிதி விடுவிப்புக் கோரிக்கையினை தமிழக முதல்வர் நேற்று அளித்துள்ள நிலையில், மத்திய அரசு அலுவலர் குழு நேரடி ஆய்வும் மேற்கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் இந்தத் துயர்மிக்க நேரத்தில அவர்களை ஆதரிக்கும் வகையில் மத்திய அரசு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.