“2021 தேர்தலில் இபிஎஸ் தோற்றது போல 2026-ல் ஸ்டாலின் தோற்பார்!” – தினகரன் கருத்து

31 0

 “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோற்றது போல 2026 தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோற்பார்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:“தேர்தல் அரசியலில் மக்கள் வாக்களித்து தான் ஒருவர் முதல்வர் ஆகிறார். இதில் பிறப்பால் ஒருவர் முதல்வராகிறார் என்று எந்த அர்த்தத்தில் ஆதவ் அர்ஜுனா கூறுகிறார் என்று தெரியவில்லை. உதயநிநி ஸ்டாலின் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். அதை எப்படி குறை சொல்ல முடியும். தேர்தலில் மக்களை சந்தித்து வெற்றி பெற்று வருபவர்களை பிறப்பால் வந்தவர்கள் என சொல்ல முடியாது. நான் திமுகவையோ, வாரிசு அரசியலையோ ஆதரித்து பேசவில்லை.

திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறியுள்ளனர். இதில் அகம்பாவம், ஆணவம் இருப்பதாகத் தெரியவில்லை. திமுகவின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியால் 2026 தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வரும். திமுக கடந்த தேர்தலில் பாஜகவை காட்டி பயமுறுத்தி ஆட்சிக்கு வந்தனர். இந்த முறை அது நடக்காது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பை திமுக சரியாகக் கையாளவில்லை. சாத்தனூர் அணையை திட்டமிடாமல் திறந்ததால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

மக்கள் விரோத ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கிறது. திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 2024 தேர்தலில் திமுக வெற்றி பெற எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக உதவி செய்தார். திமுகவின் ‘பி’ டீமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். 2026-க்கு பின்பு அதிமுகவை மூடுவிழா காணச் செய்துவிடுவார் பழனிசாமி. கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் அதிமுக ஆட்சி பொறுப்பில் இருந்தபோது சாட்சிகளை கலைத்து விட்டனர். கோடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டணை பெறுவார்கள்.

வயதில் மூத்தவரான பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் கூறிய விதம் வருந்தத்தக்கது. பழனிசாமி பாணியில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினும் இப்போது பேசி வருகிறார். 2021 தேர்தலில் பழனிசாமி தோற்றது போல 2026 தேர்தலில் ஸ்டாலின் தோற்பார். 2026 தேர்தலில் கூட்டணியைத் தக்கவைத்துக் கொண்டாலும் தோற்றுவிடுவோம் என்ற விரக்தியில் பேசி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல முதல்வர் வேட்பாளரை அறிவித்துதான் தேர்தலை சந்திப்போம்,” என்று அவர் கூறினார்.