பதவிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்

15 0

அநுராதபுரம், பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை (05) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பதவிய,போகஹவெவ பிரதேசத்திற்கு கடந்த வியாழக்கிழமை (05) இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இருந்த 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வயோதிபப் பெண் பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கிரிஇப்பன்வெவ, வெலிஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துபாயில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “வெலிஓயா பிரியந்த” என்பவரின் தலைமையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த வயோதிபப் பெண்ணின் பேத்தியை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்படவிருந்ததாகவும் ஆனால் தவறுதலாக வயோதிபப் பெண் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் 61 கிராம் 105 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.