பல்லடம் அருகே 3 பேர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வர் அனுமதிக்க வேண்டும்: அண்ணாமலை

21 0

பல்லடம் அருகே 3 பேர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வர் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோரை மர்ம கும்பல் கொலை செய்து, 8 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அண்ணாமலை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்லடம் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் காவல் துறை மீது முழு நம்பிக்கை இருந்தாலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வர் அனுமதிக்க வேண்டும்.

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குவதன் மூலம், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் குறையும். போதை இல்லாமல் இந்த அளவுக்கு கொடூரமாக குற்றவாளிகள் செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே, கிராமப் பகுதிகளில் போலீஸார் ரோந்துப் பணிகளை அதிகப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எனினும், இந்த வழக்கில் அரசியல் செய்யவில்லை. புலன் விசாரணையில் தேர்ந்த காவல் அதிகாரிகளை நியமித்து, குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும். அடுத்தகட்டமாக சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும். கிராமப்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதுடன், காவல் நிலையங்களில் போதிய காவலர்களை நியமிக்க வேண்டும். திருப்பூர், கோவை மாவட்டங்களில் குவிந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த ஆவணங்களை, தொழில் நிறுவனங்கள் கட்டாயம் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீமான் எனக்கு அண்ணன் போன்றவர். அவர் குறித்தும், அவரது கட்சி குறித்தும் காவல் துறை அதிகாரி ஒருவர் பேசியுள்ளார். இது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அதேபோல, திருமாவளவனின் குரல், தமிழகத்தின் முக்கிய குரல். அம்பேத்கர் குறித்து தவெக தலைவர் விஜய் பேசலாம். எனினும், அம்பேத்கர் கருத்தை கொண்டு செல்லும் ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டுமே.

பாஜகவையும், அதானியையும் ஏன் இணைத்துப் பேசுகிறீர்கள்? பாஜக அல்லாத மாநிலங்களிலும், அதானியுடன் தொழில்ரீதியாக பலர் தொடர்பு வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.