தரமற்ற மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது – சுகாதார அமைச்சர்

24 0

அரச வைத்தியசாலைகளுக்கு 500 தரமற்ற மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானவை.

தவறான செய்திகளை சமூகமயப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம் என சுகாதாரத்துறை மற்றும்  ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (06)  நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு  500 தரமற்ற மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக எதிரணியின் பிரதம கொறடா  இன்று (06) காலை முன்வைத்த  விடயம்  குறித்து சுகாதார அமைச்சுடனும், உரிய தரப்பினருடனும்  கலந்துரையாடி ,  தகவல்களை பெற்றுக் கொண்டேன்.

எவ்விதமான தரமற்ற மருந்துகளும் அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று மருந்து விநியோக பிரிவும், தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையும் குறிப்பிட்டுள்ளது. ஆகவே தவறான  விடயங்களை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம்.

சுகாதாரத்துறையில் எந்த பிரச்சினைகளும் கிடையாது என்று நாங்கள் குறிப்பிடவில்லை. காணப்படும் பிரச்சினைகளுக்கு  உரிய முறையில் தீர்வு எட்டப்படும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மருந்து தட்டுப்பாடுகள் காணப்படுமாயின் உரிய வழிமுறைகளுக்கு அமைய பிரதேச  ரீதியில் உரிய  விநியோகஸ்தர்களிடமிருந்து  மருந்துகளை கொள்வனவு செய்ய முடியும். அதற்கான  ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

500 தரமற்ற மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது, ஆனால் அது எவ்வகையான மருந்துகள் என்று வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. ஆகவே தாம் பெற்றுக் கொள்ளும் மருந்து தரமற்றதா என்று பொது மக்கள் சந்தேகம் கொள்ள நேரிடும். ஆகவே பொறுப்பில் உள்ளவர்கள் முறையற்ற வகையில் கருத்துக்களை  குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ருக்ஸான் பெல்லன்வில ஊடகங்களுக்கு குறிப்பிட்ட விடயத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா மக்களின் நலன் கருதி இந்த கேள்வியை முன்வைத்திருந்தார். ஆகவே எவ்விதமான தரமற்ற மருந்துகளும் வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.