சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை திருத்த ஆதரவளிக்கத் தயார்

22 0

சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் பாராளுமன்றத்தை கூட்டி, நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்  ஒப்பந்தத்துக்கு இணக்கம் இல்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவோம்.

அதற்கு நாங்கள் எமது முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06)  அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப்பதிவு கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தற்போதைய அரசாங்கம் பெரும் மக்கள்  ஆணையைப் பெற்று, நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி மக்களின் உரிமைகளுக்கு துரோகம் இழைத்துள்ளது.

ஏலவே எட்டியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை அவ்வாறே தொடர்வதானது அண்மைக் காலத்தில் நடந்த மிகப் பெரிய துரோகமாகும்.அதனால் இந்த இணக்கப்பாட்டில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

முன்னைய அரசாங்கத்தின் பிரேரணையின் பிரகாரம் சர்வதேச பிணைமுறியாளர்களுடன் எதிர்வரும் 12ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட இருக்கிறது.

அதனால் 12ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டி இந்த ஒப்பந்தத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை இல்லாமல் செய்ய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பொன்றை எடுத்து, நாங்கள் இரண்டு தரப்பினரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்வோம். அதற்கு நாங்கள் தயார்.

எமது நாடு கானாவைப் போல் செயல்பட வேண்டும். கானாவும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தபோது அந்த நாடு, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் நாணய நிதியத்துடன் கலந்துரையாடி கடன் மீள செலுத்தும் காலத்தை நீடித்துக்கொண்டது.

ஒரு நாடாக கானா சென்ற வழியில் நாமும் செல்ல வேண்டும். தற்போதுள்ள இணக்கப்பாடு  நிறைவேற்றப்பட்டால், பாதகமான கடன் சுழற்சியில் சிக்குண்டு அதன் பங்குதாரர்களாக மாறி, பல தசாப்தங்களாக கடன் சுமையில் தவிக்கும் நாடாக மாறுவோம்.

“வளமான நாடு-அழகான வாழ்க்கை” தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் மாற்று கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு மூலம் திசைகாட்டி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டும் இணக்கப்பாட்டை தொடர்ந்து முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் அண்மையில் நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு, இந்த புதிய முறைமையின் மூலமா அல்லது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பின்பற்றிய வழிமுறைமையின் ஊடாகவா என கேட்கிறேன்.

வளமான நாடு-அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கான பயணம் தற்போதுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தொடருமானால், அரசாங்கத்தின் பயணம் வீழ்ச்சியடையும் சர்வதேச நாணய நிதியத்தின்  மார்ச் 2023 அறிக்கையில், 2033 இல் இருந்து கடன் திருப்பிச் செலுத்துதலை ஆரம்பிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தது.

திருத்தங்களை மேற்கொள்ளாது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய இணக்கப்பாட்டின் மூலமும், 2028 இல் கடன் செலுத்தும் பணியையே மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

இன்னும் 4 வருடங்களில் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கு எந்த அரசாங்கத்தாலும்  முடியாது.

இந்த இணக்கப்பாட்டின் மூலம் நாட்டை ஆபத்தில் ஆழ்தியுள்ளனர். தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியின் அடிச்சுவடுகளையே பின்பற்றி வருகின்றனர்.

அரசாங்கம் நாணய நிதியத்தின் அறிக்கைகளை ஆராயாமல், நீட்டிக்கப்பட்ட கடன் வசதிகளைப் பெறுவதற்காக மட்டுமே செயல்படுவது ஆபத்தான சூழ்நிலையாகும்.

தற்போதுள்ள இணக்கப்பாடு பலவீனமானது, இதற்கு அப்பால் சென்று, திருத்தங்களை மேற்கொண்டு புதிய இணக்கப்பாட்டை எட்ட வேண்டும். அதற்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம் என்றார்.