சக்தி அரிசி கூட்டுறவு செயற்திட்டத்தை மீண்டும் அமுல்படுத்துங்கள் – ஹர்ஷ டி சில்வா

24 0

அரிசி தட்டுப்பாட்டுக்கு வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்தோ அல்லது இராணுவத்தை கொண்டோ தீர்வு காண முடியாது. தற்போதைய அரிசி தட்டுப்பாட்டுக்கு ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க பொறுப்புக் கூற வேண்டும்  என்று குறிப்பிட போவதில்லை.

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண சக்தி அரிசி கூட்டுறவு செயற்திட்டத்தை மீண்டும் அமுல்படுத்துங்கள். முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என    ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி  சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை  (06) நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நாட்டு மக்கள் அமோக ஆணை வழங்கியுள்ளார்கள். நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும்  சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். ஏனெனில் அனைவரும் மக்களின் நலன் கருதியே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோம்.

நாட்டு மக்களின் பிரதான உணவாக சோறு காணப்படுகிறது.  இருப்பினும் தற்போது அரிசிக்கான தட்டுப்பாடு காணப்படுவதுடன், அரிசியின் விலை உயர்வடைந்துள்ளது .

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து 12 வர்த்தமானிகளை வெளியிட்டு பின்னர் அவற்றை மீளப் பெற்றார்.

இறுதியாக 13 ஆவது தடவையாக வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்து    சிவப்பு அரிசியின் விலை 210 ரூபா,  நாடு அரிசியின் விலை 220 ரூபா ,  சம்பா அரிசிக்கு 230  ரூபா என்ற அடிப்படையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது.

அரிசிக்கான  கட்டுப்பாட்டு விலை  விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஒருசில பகுதிகளில்  அதிக விலைக்கு அரிசி விற்கப்படுகிறது. அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக குறுகிய கால அடிப்படையில் அரிசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நீண்டகால தீர்வு ஏதும் முன்வைக்கப்படவில்லை. அரிசி இறக்குமதிக்கான தடைகள் நீக்கப்படும் போது நடுத்தர அரிசி  ஆலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அரிசி தட்டுப்பாட்டுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொறுப்புக் கூற வேண்டும் என்று நாங்கள் குறிப்பிடவில்லை.வர்த்தமானி வெளியிட்டோ அல்லது  இராணுவத்தை     கொண்டோ அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியாது.

2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறே அரிசி தட்டுப்பாடு தீவிரமடைந்திருந்தது. சிறந்த கொள்கைத் திட்டங்களை வகுத்து  210 நடுத்தர அரிசி ஆலை உற்பத்தியாளர்கள், 10000 விவசாயிகளை உள்ளடக்கி 8 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் ‘ சக்தி அரிசி கூட்டுறவு செயற்திட்டத்தை’ ஆரம்பித்தோம்.

இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாத்துக்கு முன்னர் அனைத்து வகையான தேசிய உற்பத்தி அரிசி வகைகளின் விலை 100 ரூபாவுக்கும் குறைவானதாக   காணப்பட்டது.

ஆகவே தற்போதைய அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு சக்தி அரிசி கூட்டுறவு திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துங்கள்.

நாங்கள் வைத்த சக்தி என்ற பெயர் உங்களுக்கு பிரச்சினை என்றால் அரசாங்கத்துக்கு தேவையான பெயரை வைத்துக் கொள்ளுங்கள். எமக்கு பிரச்சினையில்லை. அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.