சர்வதேச பிணைமுறியில் திருத்தங்களை மேற்கொள்ள தற்போது முடியாது

18 0

சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட முன்னர் பாராளுமன்றத்தை கூட்டி சர்வதேச பிணைமுறி பிரேரணைகளில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டுள்ளபோதும் அதனை தற்போது செய்ய முடியாது. அதற்கு போதுமான காலம் இல்லை.

அதனால் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கமைய சர்வதேச பிணைமுறி நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்று உரிய காலப்பகுதிக்குள் முடிவுக்கு கொண்டுவருவதே எமது இலக்காகும் என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06)  அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப்பதிவு கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாங்கள் விரும்பியோ விரும்பாமலாே சர்வதேச நாணய நிதிய செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நாங்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னாலே நாணய நிதியத்தின் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க தூரம் சென்றிருந்தன.

அதில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்களவு செயற்பட்டிருந்தன. குறிப்பாக சர்வதேச பிணைமுறி தொடர்பான காெடுக்கல் வாங்கல்கள் செயற்படுகள் நாங்கள் அதிகாரத்துக்கு வரும்போது இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த ஒப்பந்தத்தில் சில குறைபாடுகள் இருக்கின்றன. அதற்கு மாற்று பிரேரணைகளை அவர்களுடன் கலந்துரையாடி சர்வதேச பிணைமுறியை மறுசீரமைப்பு செய்யும் கலந்துரையாடலை நீட்டிக்க எங்களுக்கு இயலாது.

அவ்வாறு செயற்பட்டால் இந்த நடவடிக்கை மேலும் பிற்படுத்தப்படும். அதனால் சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் எதிர்பார்ப்பது, நாடு என்றவகையில் நாங்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவும் செய்துகொள்ளவதாகும்.

அந்த நடவடிக்கையே இதன் மூலம் தற்போது இடம்பெறுகிறது. மாறாக நீண்டகால பொருளாதார திட்டத்துக்கு எங்களிடம் வேலைத்திட்டம் இருக்கிறது. அதனை நாங்கள் மேற்கொள்வோம்.

அத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதி நாணய நிதியத்துடன் கைச்சாத்திட முன்னர் பாராளுமன்றத்தை கூட்டி சர்வதேச பிணைமுறி பிரேரணைகளில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தெரிவிக்கிறது. அதனை செய்ய முடியாது.

ஏனெனில் அதற்கு தற்போது காலம் போதாது. அதனால் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கமைய சர்வதேச பிணைமுறி நடவடிக்கையை உரிய காலப்பகுதிக்குள் முடிவுக்கு கொண்டுவருவதே எமது இலக்காகும். எமது அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட பிரகாரம் நாங்கள் முன்னுக்கு செல்வோம்.

மேலும் எமது நீண்டகால திட்டத்துக்கு அமைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே எமது திட்டம் அதற்கு சிறிது காலம் செலலும்.

அதனால் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவாக மீள உடனடி நடவடிக்கை எமக்கு தேவை.

அதற்காக வெளிநாட்டு செலாவணியை பெற்றுக்கொள்ள முடியுமான துறைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தியுள்ளோம்.

அந்தவகையில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை தற்போது நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.

அதேபாேன்று வெளிநாட்டு தொழில் வாய்ப்புத் துறை எமக்கு அதிக வெளிநாட்டு செலாவணி கிடைக்கு இடமாகும். அந்த துறையையும் முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றார்.