தேசியத்தை இனவாதம் என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. தேசியத்தை சிறந்த முறையில் அடையாளப்படுத்திக் கொண்டு அதற்கமைய செயற்படாவிடின் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் கோட்டாபய ராஜபக்ஷவின் நிலையே ஏற்படும் என சர்வஜன சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபட்டோம். எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கொள்கை பிரகடனத்தில் பல சிறந்த திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி 75 ஆண்டுகால அரசியலை சாபம் என்று விமர்சித்தது. பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளதுடன், பல பொய்களையும் குறிப்பிட்டுள்ளது என்பதையும் வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும்.
ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்தில் முறையான கோட்பாடு மற்றும் இலக்கு குறிப்பிடப்படவில்லை. சிறந்த திட்டங்கள் ஏதும் இல்லாவிடின் கடந்த காலங்களை போன்றே இந்த கொள்கை பிரகடனமும் பாரம்பரியமானதாகவே கருதப்படும்.
இனவாதத்தை முழுமையாக இல்லாதொழிப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. இனவாதத்துக்கு எதிராகவே நாங்கள் செயற்படுகிறோம். தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுபவர்களை இனவாதிகள் என்று சித்தரிக்க கூடாது. தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டதால் தான் அமெரிக்கர்கள் டொனால்ட் ட்ரம்பை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளார்கள்.
தேசியத்தை இனவாதம் என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.தேசியத்தை சிறந்த முறையில் அடையாளப்படுத்திக் கொண்டு செயற்படாவிடின் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது என்றார்.