கடந்த 03.12.2024 அன்று குறிப்பிட்டவாறு நாளை காலை தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்று சுழற்சி உருவாகின்றது. இது நாளை இரவு அல்லது நாளை மறுதினம் (08.12.2024) காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி முதலில் மேற்கு வடமேற்கு திசையாக நகர்ந்து பின்னர் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காள விரிகுடாவில் இந்த தாழமுக்கம் வலுவடைவதற்கான கடல் மேற்பரப்பு வெப்பநிலை நிலவுகின்றது. இன்று வங்காள விரிகுடாவில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 29 பாகை செல்சியஸ் ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் நாளை உருவாகும் காற்று சுழற்சி எதிர்வரும் 10.12.2024 அன்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் இது கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் இருந்து சற்று தொலைவாகவே கடற்பகுதியில் வடக்கு, வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் நகர்வு திசை மற்றும் வேகம் அதற்கு கிடைக்கும் மறைவெப்ப சக்தியைப் பொறுத்து மாற்றமடையலாம் என்பதனைக் கருத்தில் கொள்க.
ஆனால் இக் காற்றழுத்த தாழ்வு நிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 10.12.2024 இரவு முதல் 15.12.2014 வரை மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சில இடங்களில் மிகக் கன மழைக்கும் வாய்ப்புள்ளது.
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மண்ணீரக் கொள்ளளவில் 97% பூர்த்தியாகியுள்ளது. கடந்த 28.11.2024 அன்று 100% ஆக இருந்த இந்நிலைமை கடந்த சில நாட்களாக இருந்த வெப்பநிலையின் காரணமாக ஆவியாக்கத்தின் விளைவாக தற்போது 97% ஆக உள்ளது. ஆகவே சராசரியாக 30 மி.மீ. மழை கிடைத்தால் இது மீண்டும் 100% இனை அடைந்து விடும். ஆகவே அதன் பின்னர் கிடைக்கும் மழை தரை மேற்பரப்பில் தேங்கி மீண்டும் தாழ்வான பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாம்.
அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் குளங்களும் அவற்றின் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அவை சற்று கன மழை (30 மி.மீ. முதல் 50 மி.மீ. வரை) கிடைத்தாலே மீண்டும் வான் பாயத் தொடங்கும். ஆகவே குளங்களின் உபரி நீர் வெளியேற்றமும் சில இடங்களில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கலாம்.
நாளை மறுதினம் முதல் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
அதேவேளை எதிர்வரும் 19.12.2024 அன்று வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. அது தொடர்பான மேலதிக விபரங்களை எதிர்வரும் 14 ம் திகதிக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும்.
-நாகமுத்து பிரதீபராஜா-