வட்டுவாகல் பாலத்தை புதிதாக நிர்மாணிக்குமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை

19 0

முல்லைத்தீவில்  அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் புதிதாக அமைக்கப்பட வேண்டும் எனவும், அதனை எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் உள்வாங்குமாறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(6) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் இங்கு கருத்து தெரிவித்த அவர், அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பலத்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பலத்த வெள்ள அனர்த்தம் காரணமாக பல வீதிகள் பாதிக்கப்பட்டதுடன், பல ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

 

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூடி நெற்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மக்கள் துன்பத்தில் மூழ்கியுள்ளனர்.

கடற்றொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாமல் காற்று, தொடர் மழை, பலத்த கடல் சீற்றம் போன்ற மிக மோசமான அனர்த்தங்கள் காரணமாக மிகவும் நொந்துபோயுள்ளனர். எனவே, விவசாயிகளுக்கு, கடற்றொழிலாளர்களுக்கும், கால்நடைவளர்ப்பாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் கடந்த 1955ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கின்றனர்.

வட்டுவாகல் பாலத்தை புதிதாக நிர்மாணிக்குமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை | Vattuvagal Bridge Needs Reconstruction Ravikaran

 

பலத்த துன்பத்தை முல்லைத்தீவில் இருக்கும் இந்தப் பாலமும் அனுபவித்து வருகின்றது. இந்தப் பாலம் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரின்போது பாரிய சேதங்களுக்கு உள்ளானது. அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி பாலத்தின் இரு ஓரங்களிலும் பாதுகாப்பு கற்கள்கூட இல்லாமல் காணப்படுகின்றன.

மழைக்காலங்களில் நீரில் மூழ்கும் இந்தப் பாலத்தால் பயணிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் துன்பத்தைச் சொல்லில் வடிக்க முடியாது. சுமார் 600 மீற்றர்தான் இந்தப் பாலத்தின் நீளம். நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

தென்பகுதிகளில் இதுபோன்றதொரு பாலம் இருந்திருந்தால் எப்போதோ புதிய பாலம் அமைக்கப்பட்டிருக்கும். தொடர்ச்சியாகப் பலத்த இடர்பாடுகளைச் சந்தித்து வரும் முல்லைத்தீவு மக்களைப் போல் இந்தப் பாலமும் மக்களோடு சேர்ந்து துன்பத்தை அனுபவித்தே வருகின்றது. இந்தப் பாலத்தையும் அதன் சேதங்களையும் கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் உபாலி சமரசிங்கவும் பார்வையிட்டார்.

அத்தோடு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன், வைத்தியர் ப.சத்தியலிங்கம் ஆகியோரும் பார்வையிட்டிருந்தனர்.

 

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், காதர் மஸ்தான் ஆகியோரும் இந்தப் பாலம் புதிதாக அமைக்கப்பட வேண்டும் என ஆதரவு தெரிவித்தனர்.

தயவு செய்து நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் இந்த வட்டுவாகல் பாலத்தைப் புதிதாக நிர்மாணிப்பதற்கு ஆதரவு தாருங்கள்.

இந்த வட்டுவாகல் பாலத்தைப் புதிதாக நிர்மாணிக்க, அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் உள்வாங்குகள்” – என்றார்.