அதானியை முதலமைச்சர் சந்திக்கவில்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

18 0

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலதிபர் அதானியை முதலமைச்சர்சந்தித்தது போலவும், அதிக விலைகொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பதுபோலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலைக் கட்டுக்கதைகள் போல் வெளியிட்டு – தெரிவித்து வருவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் அதானியைச் சந்திக்கவும் இல்லை.

அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அ.தி.மு.க. ஆட்சியில் நிர்வாக ரீதியாகவும், நிதிநிலைமை ரீதியாகவும் முற்றிலும் சீர்குலைந்திருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை அடுத்தடுத்த நிர்வாகச் சீர்திருத்த மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை மூலம், இன்றைக்குத் தமிழ்நாடு மின்சார வாரியத்தைத் தலைநிமிர வைத்துள்ளவர் முதலமைச்சர். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி அடிப்படை உண்மை கிஞ்சித்தும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பாடு அல்ல!\”ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும்.

தவறும்பட்சத்தில், அபராதம் செலுத்த வேண்டும் ” என்ற ஒன்றிய அரசின் கட்டாய விதியின் அடிப்படையில் 2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI)வுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல!இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த மின்சார வாரியங்களைப் போல தமிழ்நாடு மின்சார வாரியமும் ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) நிறுவனத்துடன் மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்து வருகின்றது. குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தப் பிறகு, எந்த தனியார் நிறுவனங்களுடனும் மின்சார வாரியம் நேரடியாக எவ்விதமான ஒப்பந்தமும் செய்து கொள்வதில்லை.

இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும், மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், ஒன்றிய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ள மரபுசாரா கொள்முதல் (RPO) இலக்குகளை அடைவதற்கும் மாண்பமை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற்று செய்யப்பட்ட ஒப்பந்தங்களாகும். இதில், எவ்வித முறைகேடும், விதிமுறை மீறல்களும் இல்லை.இன்னும் சொல்லப் போனால், ஒன்றிய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பெறுவது குறித்த கட்டாய விதி எதுவும் இல்லாத காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் அதானி லிமிடெட் நிறுவனம், தங்களுக்கு சொந்தமான ஐந்து நிறுவனங்கள் மூலமாக, 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்கான எரிசக்தி கொள்முதல் ஒப்பந்தத்தில் 04/07/2015 அன்று கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 என முடிவு செய்து, 31/03/2016க்கு முன் உற்பத்தி ஆலைகள் இயக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

அதானி நிறுவனம் 31/03/2016க்கு முன் பல்வேறு தேதிகளில் 313 மெகாவாட் மின்சாரத்தை இயக்கி, ஒப்பந்தப்படி ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 உரிமை கோரியது.. 31/03/2016 தேதிக்குப் பிறகு, அதாவது கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து, 18/09/2016 அன்று 288 மெகாவாட் மின்சாரம் வழங்கியது.31/03/2016க்குப் பிறகு வழங்கப்பட்ட மின்சாரத்திற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 வேண்டுமென அதானி நிறுவனம் கோரியது. மேலும் 22/03/2016 முதல் மின்சாரம் வழங்கிட தயாராக இருந்ததாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் (TANGEDCO) முழு செயலற்றதன்மையின் காரணமாக மின்சாரம் வழங்க முடியவில்லை எனவும் திரித்து கூறியது.. ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், அதானி நிறுவனத்தின் குற்றச்சாட்டை மறுத்து, ஒப்பந்தப்படி ஒரு யூனிட்டுக்கு ரூ.5.10 கட்டணத்தை கொடுக்க முடியுமென தெரிவித்தது.

இந்த சூழ்நிலையில் அதானி நிறுவனம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) முன், MP எண்.25(2020) மற்றும் MP எண். 26(2020) என இரு மனுக்களை தாக்கல் செய்தது. ஆயினும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 20/07/2021 அன்று, அதானி நிறுவனம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அதானி நிறுவனம், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முன் (APTEL) மேல்முறையீடு செய்தது (எண்.287 – 2021). மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அந்த மேல்முறையீட்டை அனுமதித்து, யூனிட்டுக்கு ரூ.7.01 கட்டண விகிதத்தை 07/10/2022 அன்று அங்கீகரித்தது. மின்சாரத்திற்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், அதானி நிறுவனம், ரூ.568 கோடிக்கான பில்களை PRAPTI (Payment Ratification and Analysis in Power Procurement) போர்ட்டலில் சமர்ப்பித்தது. PRAPTI போர்ட்டலில் சமர்ப்பிக்கப்பட்ட பில்களை 75 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென விதி உள்ளது. ஆயினும், மேல்முறையீட்டு ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 2022ல், சிவில் மேல்முறையீட்டு முறையில் (எண். 38926), உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மின்சாரத்திற்கான மேல்முறையீட்டு ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரியது.

17/02/2023 அன்று, உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. அதன் காரணமாகவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ரூ.568 கோடி செலுத்தியது. தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த மேல்முறையீடு, (மேல்முறையீட்டு எண் 1274 மற்றும் 1275 – 2023) இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.