திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா குறித்த கட்டுப்பாடுகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இன்று (டிச.06) மாலை திருவண்ணாமலை மாவட்ட அமைச்சர், அறநிலையத்துறை செயலாளர், மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவில் உள்ள சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு, எவையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமோ அவற்றை பரிசீலித்து, வருகின்ற பகதர்களின் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு இன்று மாலை முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
காரணம், திருவண்ணாமலை நடக்கக்கூடாத சோகம் ஒன்று நடந்திருக்கிறது. அதையும் கருத்தில் கொண்டு ஆய்வின் இறுதியை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று கார்த்திகை தீபத் திருவிழா கட்டுப்பாடுகள் இன்றே அறிவிக்கப்படும். இவ்வாறு சேகர் பாபு தெரிவித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13-ம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது. அன்று மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் காணலாம். கார்த்திகை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் வரும் 17-ம் தேதி நிறைவு பெறுகிறது.