நெல்லை அருகே குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வேன் லாரி மீது மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பொட்டல்காடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது30). ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்தவர்கள் உலகநாதன் (52), மு.முருகன் (52), ரா.முருகன் (52), மூலக்கரை முத்துக்கருப்பன் (24), தென்திருப்பேரை அருகே உள்ள கடையனோடை பகுதியை சேர்ந்தவர் சங்கர் பாசு (35).
டிரைவர் மற்றும் கான்டிராக்டர்களான இவர்கள் அனைவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் இவர்கள் குற்றாலத்திற்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை ஒரு ஆம்னி வேனில் 6 பேரும் ஆறுமுகநேரியில் இருந்து குற்றாலத்திற்கு புறப்பட்டனர்.
இரவில் குற்றாலம் சென்றடைந்த இவர்கள் நள்ளிரவு வரை அனைத்து அருவிகளிலும் குளித்தனர். பின்னர் ஆம்னி வேன் மூலம் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வேனை முத்துக்கருப்பன் ஓட்டி வந்தார். நெல்லையை அடுத்த வெள்ளாளன்குளம் அருகே ஆம்னி வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது ஆம்னி வேனும், தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு அண்டித்தோடு ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இதில் வேனின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கியது. இந்த விபத்தில் வேனில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீதபற்பநல்லூர் மற்றும் ஆலங்குளம் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பலியான 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் கிளீனரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து காரணமாக நெல்லை தென்காசி நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான ஆம்னி வேன் ரோட்டில் இருந்து அகற்றப்பட்ட பின் போக்குவரத்து சீரானது.
குற்றாலத்திற்கு குளிக்க சென்றவர்கள் பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்த 6 பேரின் குடும்பத்தினரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. 6 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து அவர்களின் சொந்த ஊரான ஆறுமுகநேரி, உடன்குடி பகுதி சோகத்தில் மூழ்கியது.