குரங்குகள் தேங்காய்களை உண்பதால் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்த அரசு கூறுகிறது . அவ்வாறானால் கடந்த ஆண்டு நாட்டில் குரங்குகள் வாழவில்லையா? எனவே குரங்குகளை குற்றவாளிகளாக்க வேண்டாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.யான டி.வி.சானக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற கணக்கு வாக்குப்பதிவு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாடு முழுவதும் கடந்த வாரம் ஏற்பட்ட மழையுடனான காலநிலையால் பெருமளவிலான விவசாய நிலங்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குவதாக அரசாங்கம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விவசாயிகள் அதிகளவில் செலவழித்துள்ள நிலையில் 40 ஆயிரம் ரூபாய் வழங்குவது அநீதி.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் நஷ்டஈடு தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் வினவிய போது 2012,2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறு தான் நஷ்டஈடு வழங்கப்பட்டது’ என்று பதிலளிக்கின்றார். ஒரு கையொப்பத்தின் ஊடாக அனைத்தையும் மாற்றுவதாக குறிப்பிட்டார்கள். ஆனால் இன்று ஏற்கனவே நடைமுறைப்படுத்திய தீர்மானங்களை செயல்படுத்துவதாக கூறுகிறார்கள்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் மாபியாக்களின் செயற்பாடு கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளது.தேங்காய்க்கு கூட நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.குரங்குகள் தேங்காய்களை உண்பதால் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்த அரசு கூறுகிறது . அவ்வாறானால் கடந்த ஆண்டு நாட்டில் குரங்குகள் வாழவில்லையா? எனவே குரங்குகளை குற்றவாளிகளாக்க வேண்டாம்.தேங்காய்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுவே உண்மை. வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என்றார்