கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை இருப்பதால் கலந்துரையாடி இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பது தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு வாக்குப்பதிவு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இக் கலந்துரையாடலுக்கு பின்னரும் பாராளுமன்றத்திலும் அது தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன . குறிப்பாக கல்முனை பிரதேச செயலக தொகுதி தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி தலையிடுவதாக வாக்குறுதி வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினையுள்ளது.எனவே இது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடுவோம். கலந்துரையாடல் ஊடாக இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும்.
இந்த விடயம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி. மற்றும் சத்தியலிங்கம் எம்.பியுடன் கலந்துரையாடினேன். எமதுமக்களின் பிரச்சினை தொடர்பாகவும் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன்.. அதனால் இவ்வாறான பிரச்சினைகள் முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்வோம்.