இவ்வாண்டு இலங்கையில் சிவில் செயற்பாடுகளுக்கான இடைவெளி ‘ஒடுக்கப்பட்டதாக’ தமது வருடாந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் ‘சிவிகஸ் மொனிட்டர்’ எனும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, இவ்வருடம் ஆர்ப்பாட்டங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டதாகவும், தமிழ் ஊடகவியலாளர்கள் அவர்களது தொழில் நிமித்தம் இலக்குவைக்கப்பட்டதாகவும் கரிசனை வெளியிட்டுள்ளது.
‘சிவிகஸ் மொனிட்டர்’ எனும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பானது 2024 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் 198 நாடுகளில் நிலவும் சிவில் செயற்பாடுகளுக்கான இடைவெளியின் தன்மையை ஆராய்ந்து ‘தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையில் மக்கள் அதிகாரம்’ எனும் தலைப்பில் அதன் வருடாந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையில் ஒவ்வொரு நாட்டினதும் பிரஜைகள் அந்நாட்டில் கொண்டிருக்கும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன பற்றி ஆராயப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பாக ஆசிய, பசுபிக் பிராந்தியத்திலுள்ள பெரும்பாலான நாடுகள் தமது பிரஜைகளின் சிவில் செயற்பாடுகளுக்கான இடைவெளியை வெகுவாக மட்டுப்படுத்தியிருப்பதாக சிவிகஸ் மொனிட்டர் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கையைப் பொறுத்தமட்டில் இவ்வாண்டு சிவில் செயற்பாடுகளுக்கான இடைவெளி ‘ஒடுக்கப்பட்டதாக’ சுட்டிக்காட்டியுள்ள சிவிகஸ் அமைப்பு, ஆர்ப்பாட்டங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
‘உயர் வரி அறவீடு, எரிபொருள் விலை மற்றும் மின்சாரக்கட்டண அதிகரிப்பு என்பவற்றுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் கொழும்பில் நடாத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டன.
அதேபோன்று பெப்ரவரி 4 ஆம் திகதி நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை ‘கரி நாளாக’ அறிவித்து, வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப்பேரணி மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம் நடத்தப்பட்டன. அதே மாதத்தில் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பு முகங்கொடுத்துவரும் சவால்களுக்கான தீர்வினை வழங்குமாறு கோரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தைக் கலைப்பதற்கும் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை என்பன பிரயோகிக்கப்பட்டன’ என சிவிகஸ் மொனிட்டர் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி கடந்த மேமாதம் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு எதிராகப் பதிவான அச்சுறுத்தல்கள், கைதுகள், நீதிமன்றத்தடையுத்தரவுகள் என்பவற்றையும் ஆவணப்படுத்தியுள்ள சிவிகஸ் அமைப்பு, குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் அவர்களது தொழில் நிமித்தம் இலக்குவைக்கப்பட்டதாகவும் கரிசனை வெளியிட்டுள்ளது.