இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளதுடன் லொறி சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
புனானை ஓமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 8 மணிக்கு பொலன்னறுவை பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறியும் வாழைச்சேனையிலிருந்து புனானை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் மியான்குளம் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாயின.
இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த 65 வயதுடைய நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் புனானை ஓமனியாமடு பிரதேச்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ரிதிதென்னையைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி என மூவர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த லொறி சாரதியே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.