’சம உரிமையை உறுதிப்படுத்தவும்

16 0

தமிழ் மக்களுக்கும் இந்த நாட்டில் சம உரிமையுள்ளது. எனவே, அந்த சம உரிமைகள்  தேசிய மக்கள் சக்தி அரசினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய    இரா. சாணக்கியன் எம்.பி, இந்த  அரசை வீழ்த்துவதோ எதிர்ப்பதோ எமது நோக்கம் அல்ல. அரசின்  முற்போக்கான நடவடிக்கைளுக்காகக்  காத்திருக்கின்றோம் என்றார்.

பாராளுமன்றத்தில்   புதன்கிழமை (04)  இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை  விளக்க உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்திக்கு எவ்வாறு நாடு முழுவதும் மக்கள் ஆணை கிடைத்ததோ அதேபோன்று வடக்கு, கிழக்கில் தமிழரசுக்கட்சிக்கே மக்கள் ஆணை கிடைத்துள்ளது. அத்துடன் அநுர சுனாமியை எமது மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே தைரியமாக எதிர்த்து நின்றது. அதனால்தான் அங்கு நாம் வரலாற்று வெற்றியைப்பெற்றோம்.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் ட அரசியல் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.  அரசியல் கைதிகளை  உடனடியாக விடுவிக்க வேண்டும். எனினும் இப்போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்  பயன்படுத்தப்படுகின்றது. எனவே, அரசு உடனடியாக இந்தப்  பிரச்சினையை  தீர்க்க வேண்டும்.

இதேவேளை காணாமல் போனோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிராக இந்தக் குற்றத்தை செய்தோர் தண்டிக்கப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் அரசு வகைப்பொறுப்புக்கூற வேண்டும் என்பதுடன் அரசின் நிலைப்பாட்டையும் அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்