சாத்தனூர் அணை திறப்பில் செம்பரம்பாக்கம் போலவே தவறு செய்த திமுக அரசு: அன்புமணி குற்றச்சாட்டு

14 0

செம்​பரம்​பாக்​கத்​தில் நடந்த அதே தவறைத்​தான் சாத்​தனூர் அணை திறப்​பில் திமுக அரசு செய்​துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்பாக அன்புமணி வெளி​யிட்ட அறிக்கை​: தமிழக அரசு தெரி​வித்​துள்ள விவரங்​களின்படி சாத்​தனூர் அணையின் நீர்​மட்டம் 119 அடி. அதன் கொள்ளளவு 7.32 டிஎம்சி. கடந்த நவம்பர் 30-ம் தேதி காலை நிலவரப்படி அணையின் நீர்​மட்டம் 117.55 அடி. அதாவது ஒன்றரை அடி நீர்​மட்டம் உயர்ந்​தாலே அணை நிரம்பி பேரழிவு ஏற்பட்​டிருக்​கும்.

அணையின் நீர்ப்​பிடிப்பு பகுதி​களில் மொத்​தமாக 170 செ.மீ. மழை பெய்த நிலை​யில், பெரு வெள்ளம் ஏற்படும் என்பதை உணர்ந்து, மக்களை பாதிக்காத வகையில் அணையில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வரை திறந்து அணை நீர்​மட்​டத்தை அரசு குறைக்​காதது ஏன்? கடந்த 1-ம் தேதி இரவு 10 மணிக்கு 4-வது வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்​பட்​டது. அப்போது, அணையில் இருந்து திறக்கப்​பட்ட தண்ணீரின் அளவு 30,000 கனஅடி மட்டுமே. அடுத்​தடுத்து உயர்த்​தப்​பட்டு, அதிகாலை 2 மணிக்கு 1.30 லட்சம் கனஅடி வெளி​யேற்​றப்​பட்​டதாக அரசு கூறி​யுள்​ளது. ஆனால், கூடுதல் நீர் திறக்​கப்​பட்டது குறித்து புதிய எச்சரிக்கை எதுவும் வெளி​யிடப்​பட​வில்லை. விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி திறக்​கப்​படும் என்று கூறி​விட்டு, 1.30 லட்சம் கனஅடி திறக்​கப்​பட்​டால், அதை மக்கள் எப்படி எதிர்​கொள்ள முடி​யும்.

கடைசியாக கடந்த 2-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு 5-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்​பட்டு 1.68 லட்சம் கனஅடி திறக்​கப்​பட்​டதாக அரசு கூறி​யுள்​ளது. ஆனால், அரசு கூறு​வதுபோல எச்சரிக்கை அதிகாலை 2.45 மணிக்கு விடப்​பட​வில்லை என்பதை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் அம்பலப்​படுத்​தியுள்​ளது. அதிகாலை 2.45 மணிக்கு 1.80 லட்சம் கனஅடி தண்ணீர் வெளி​யேற்​றப்பட உள்ளதாக, அதிகாலை 4.15 மணி அளவில்​தான் ஊடகத்​துக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நள்ளிர​வில் ஆழ்ந்த உறக்​கத்​தில் இருந்த மக்களுக்கு, நீர்வள துறை​யின் எச்சரிக்கை சென்​றடைய​வில்லை. எச்சரிக்கை விடுக்​கும் ஒன்றரை மணி நேரத்​துக்கு முன்​பாகவே, அணையில் இருந்து 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளி​யேற்​றப்​பட்​டுள்​ளது. இதை சற்றும் எதிர்​பாராத திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, விழுப்பு​ரம், கடலூர் ஆகிய 4 மாவட்​டங்​களி​லும் கரையோரங்​களில் வசிக்​கும் மக்கள் திணறினர்.

கடந்த 2015-ல் செம்​பரம்​பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வர வர திறக்​காமல், அனைத்​தை​யும் சேர்த்து வைத்து மொத்​தமாக திறந்​த​தால்​தான் பேரழிவு ஏற்பட்​டது. அதே தவறை​தான் சாத்​தனூர் அணை திறப்பு விவகாரத்​தில் திமுக அரசு செய்​துள்ளது. இவ்வாறு அன்புமணி தெரி​வித்​துள்ளார்.