ஷிரோமணி அகாலி தளம் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதத்துக்கு எதிராக செய்த செயல்களுக்காக மத குருமார்களால் விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்று பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோர் பொற்கோயிலில் சேவைப் பணிகளை நேற்று முதல் மேற்கொண்டு வந்தார்.
. சுக்பீர் சிங் பாதல் பொற்கோயிலின் வாயிலில் காவல் பணியை மேற்கொண்டு வந்தார். அப்போது அவர் அருகே நெருங்கி வந்த நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுக்பீர் சிங் பாதல் மீது சுட்டார். அப்போது பாதலுக்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த நபர் அவரது கையை பிடித்து இழுத்துச் சென்றார். இதனால் சுக்பீர் சிங் பாதல் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சுற்றி இருந்தவர்கள் பலரும் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விவரித்த அமிர்தசரஸ் காவல் ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் “துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் நரைன் சிங் சவுரா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் ஒரு முன்னாள் பயங்கரவாதி மற்றும் கிரிமினல். அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆழமாக விசாரணை நடத்துவோம். எதையும் விட்டுவிட மாட்டோம்” என குறிப்பிட்டார்.