இலங்கையர் என்ற அடையாளம் பேச்சளவில் மாத்திரம் பயன்படுத்தப்படுகிறது; கஜேந்திரகுமார்

15 0

மனித உரிமை விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கான புதிய கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம்  பேச்சளவில் மாத்திரம் பயன்படுத்தப்படுகிறதென பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான  இரண்டாம் நாள்  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் தெரிவித்ததாவது,

தேசிய மக்கள் சக்தியின் அமோக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த  பாராளுமன்றத்தில் எமது கட்சியும்இ ஜனாதிபதியின் தேசிய  மக்கள் சக்தியும் அப்போதைய ஜனாதிபதியுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை.. பயனற்ற பேச்சுவார்த்தைகளில் பங்குப்பற்றுவதையும் தவிர்த்தோம்.

ஜனாதிபதியின் கொள்கை   பிரகடனத்தில் குறிப்பிட்ட விடயங்களை கவனத்திற் கொண்டுள்ளோம்.இனவாதம் மற்றும் மதவாதம் ஆகியவற்றை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்கிறோம். நாங்களும் அதனையே எதிர்பார்க்க்கிறோம். உரிமைகளை சிறந்த முறையில் பகிர்ந்தளித்தால் முரண்பாடுகள் ஏதும் தோற்றம் பெறாது.

அகில இலங்கை தமிழ்  காங்கிரஸ் இலங்கையர் என்ற அடையாளத்தை நம்பியுள்ளது.  இருப்பினும் இலங்கையர் என்ற  அடையாளத்துக்குள் இருந்து செயற்படும் போது முறையான உரிமைகள் கிடைக்கப் பெறுகிறதா என்பதை  ஆராய வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம்  பேச்சளவில் மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது.

முன்னைய அரசாங்கங்கள் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டது.  முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இனவாதத்தை வெளிப்படையாக முன்னிலைப்படுத்தி செயற்பட்டார். வடக்கு மற்றும் கிழக்கில் நில ஆக்கிரமிப்புக்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளன. மட்டக்களப்பு மயிலத்தமடு  மேய்ச்சல் தரை அழிக்கப்பட்டு தனித்துவமான குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன.

இலங்கையின் மனித உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.   இந்த நாட்டுக்குள் நியாயமான விசாரணைகளை நடத்த முடியாது. என்பது சர்வதேச அரங்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே மனித உரிமை விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையான புதிய கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும்.

யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுக்கூரும் உரிமை அனைவருக்கும் உண்டு.  மக்கள் விடுதலை முன்னணியும் தமது உறவுகளை நினைவுகூர்வதை போன்று  நாங்களும் எம்மவர்களை நினைவுகூர்கிறோம். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் விடுதலை புலிகளின் ஆயுத போராட்டம் அரசாங்கத்தினால் மௌனிக்கப்பட்டது.  ஆகவே அடிப்படை காரணிகளுக்கு தீர்வு காணாமல் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.

பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வடக்கு மற்றும் கிழக்கில்  இருந்து மாத்திரமல்ல ஒட்டுமொத்த நாட்டில் இருந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக இ  தண்டனைச் சட்ட கோவையை பயன்படுத்தலாம்.

நீதியமைச்சர் இனவாதியல்ல, முற்போக்கான சிந்தனையுள்ளவர். அரசியல் கைதிகள் 9 பேர் இன்றும் சிறையில் உள்ளார்கள் அவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இருந்த மொரிஸ் எனும் சிறைக் கைதி அம்பாந்தோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்துமாறு  கேட்டுக் கொள்கிறேன் என்றார்.