வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் தின அனுஸ்டிப்புக்களை திட்டமிட்ட வகையில் திரிபுபடுத்தி வடக்கு – தெற்குக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் காணொளிகளை பதிவேற்றம் செய்தவர்களில் இருவர் புதிய ஜனநாயக முன்னணியின் செயற்பாட்டாளர்கள். ஊடகங்களை அடக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது. ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையூறாக அமைய கூடாது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
கடந்த இருவார காலப்பகுதியில் இடம்பெற்ற கைதுகள் மற்றும் அதற்கான காரணங்களை சபைக்கு அறிவிக்க எதிர்பார்க்கிறேன்.
இனவாதத்துக்கு எதிராகவே தேசிய மக்கள் சக்திக்கு மக்களாணை கிடைத்தது. தேசிய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து இன மக்களும் தேசிய மக்கள் சக்திக்கு ஆணை கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகவே இனவாதம் மற்றும் மதவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவே செயற்படுவோம்.
மாவீரர் தின அனுஸ்டிப்பு பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. உயிரிழந்த தமது உறவுகளை நினைவுக்கூரும் உரிமை அனைவருக்கும் உண்டு. வடக்கு மற்றும் கிழக்கு, தெற்கு உட்பட அனைத்து மாகாணங்களுக்கும் இந்த உரிமை உண்டு. நாங்கள் இன்றும் இந்த நிலைப்பாட்டில் உள்ளோம்.
விடுதலை புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த அமைப்பின் கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த இடமளிக்க முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
அண்மையில் கல்கமுவ பகுதியில் நான் குறிப்பிட்ட விடயத்தை திரிபுப்படுத்தி பொய்யான வகையில் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பொய்யான செய்தி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளேன்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த நவம்பர் மாதம் 21 முதல் 27 ஆம் திகதி வரை மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இவ்விரு மாகாணங்களிலும் 244 மாவீரர் தின அனுஸ்டிப்புக்கள் இடம்பெற்றன .இவற்றில் 10 அனுஸ்டிப்புக்களில் விடுதலை புலிகள் அமைப்பின் அடையாளங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன அல்லது ஊக்குவிக்கும் வகையில் ஒருசில விடயங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து பொலிஸார் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மாவீரர் அனுஸ்டிப்பின் போது விடுதலை புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் இடம்பெற்ற செயற்பாடுகள் தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றத்துக்கும், பருத்தித்துறை நீதிமன்றத்துக்கும், யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல் சுன்னாகம் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வடக்கில் மற்றும் கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தினம் குறித்து தெற்கில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் பல விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
2018 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தின புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை திரிபுப்படுத்தி அவை 2024 ஆம் ஆண்டு மாவீரர் தினம் என்று தெற்கில் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
மாவீரர் தினத்தை முன்னிட்டு இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவேற்றம் செய்த நால்வர் கைது செய்யப்பட்டனர். வடக்கில் ஒருவரும் பத்தேகம, மருதானை, பொரகஸ்கமுவ ஆகிய பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை பதிவேற்றம் செய்தவர்களில் இருவர் சிலிண்டர் (புதிய ஜனநாயக முன்னணியின்) இரண்டு செயற்பாட்டாளர்கள் உள்ளார்கள். ஊடகச் சுதந்திரத்தை முடக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. இருப்பினும் அனைத்து உரிமைகளும் இனங்களின் நலனை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும்.
கடந்த காலப்பகுதியில் மலட்டு கொத்து, மலட்டு ஆடை, கருத்தடை உள்ளிட்ட பல இனவாத கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் விளைவு பாரதூரமானதாக அமைந்தது. இவ்வாறான நிலைமை மீண்டும் தோற்றம் பெறுவதற்கு இடமளிகக முடியாது. புதிய சட்டங்களை இயற்றியாவது தேசிய நல்லிணக்கக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்துவோம் என்றார்.