பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் அரசாங்கம் சிறந்த உறவை பேண வேண்டும்

12 0

நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டபோது இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் எமக்கு பாரியளவில் உதவி செய்திருக்கின்றன. அதனால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அந்த நாடுகளுடன் சிறந்த உறவை பேணிவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை  விளக்க உரை மீதான இரண்டாம் நாள் விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறோம். அதனால் அரசாங்கம் பழைய விடயங்களை தெரிவிப்பதற்கு இந்த பாராளுமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்தாமல் மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 10 அத்தியாவசிய பொருட்களின் விலையை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதனை பாதுகாக்க ஜனாதிபதி அல்லது பிரதமரின் கீழ் குழுவொன்றை அமைத்து வாராந்தம் அதுதொடர்பில் ஆராய்ந்து, மக்கள் பசியால் மரணிக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் இந்த நாட்டில் இனவாதத்துக்கு இனிமேல் இடமில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதனை நாங்கள் வரவேற்கிறோம்.இந்த நாடு பொருளாதார ரீதியில் அழிவடைந்தும் வெளிநாடுகளில் கையேந்துவதற்கும் பிரதான காரணம் இனவாதமாகும். நாட்டின் சுதந்திரத்துக்காக சிங்கள, தமிழ்,முஸ்லிம்கள்  ஒன்றாக இணைந்து பாடுபட்டார்கள். ஆனால் அன்றுவந்த சிங்கள தலைவர்கள் தமிழர்களையும் முஸ்லிம்களையும் வேறு கண்களால் பார்த்தார்கள். அதனால் தமிழர்களும் முஸ்லிம்களும் இவர்களுடன் ஒன்றாக பயணிக்க முடியாது என இவர்களின் நோக்கத்துக்கு எதிராக செயற்பட்டார்கள்.

ஆனால் இன்று ஆட்சிக்கு வந்திருக்கும் ஜனாதிபதி எல்லோரையும் ஒன்றிணைத்துக்கொண்டு செல்ல தயார் என தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் இது நல்லதொரு செய்தியாகும். இந்த நாட்டை ஒரு இனத்தால் மதத்தால் கட்டியெழுப்ப முடியாது. இந்த அரசாங்கத்துக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்ட மக்களும் அங்கிகாரத்தை வழங்கி இருக்கிறது.அதனால் அரசாங்கம் எல்லோரையும் ஒரே கண்ணால் பார்த்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டபோது இந்தியா எமக்கு 4 பில்லியன் டொலரை வழங்கி மக்கள் பட்டினியால் பாதிக்காமல் பாதுகாத்த பெரிய நாடு. அவர்களுடன் அரசாங்கம் நெருக்கமான உறவை மேன்படுத்தவேண்டும். அதேபோன்று மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் இந்த நாட்டில் அரசியல் செய்ய வரவில்லை. நாடு வங்குராேத்தில் இருந்தபோது, எரிபொருள் இல்லாமல் இருந்தபோது பல்வேறு உதவிகளை வழங்கியவர்கள்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்டபோது அந்த நாடுகள் எமக்கு கடனாக எண்ணெய் வழங்கினார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை கட்டித்தந்தார்கள். நாடுக்கு பல பாலங்களை அமைத்து தந்துள்ளார்கள்.பல்கலைக்கழகங்கள் வைத்தியசாலைகளை நிர்மாணிக்க அதிக பணத்தை தந்தவர்கள். அதனால் இஸ்லாமிய நாடுகள் சிறந உறவை பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்கிறேன்.

அதேபோன்று மத்திய கிழக்கில் இருக்கும் சிறந்த முதலீட்டார்களை நாட்டுக்கு கொண்டவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நாட்டை கட்டியெழுப்ப பல்வேறு வழிகள் இருக்கின்றன. அவற்றை முன்னெக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறிய குடுபங்களின் அபிவிருத்திக்காக 8கோடி ரூபாவை நான் ஒதுக்கீடு செய்தேன். அந்த நிதியை நிறுத்தியதாக அறிகிறேன்.அதேபோன்று புத்தளத்தில் அபிவிருத்திக்காக ஒதுக்கிய 10 கோடி ரூபாவையும் இடை நிறுத்தியுள்ளதாக அறிகிறேன். அதனால் இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு அந்த நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.