வடக்கில் தண்டனை சட்டக்கோவை தெற்கில் பயங்கரவாத தடைச் சட்டம் ஏன் இரட்டை நிலைப்பாடு?

11 0

வடக்கில் சிவாஜிலிங்கம் தண்டனை சட்டகோவையின் பிரகாரம் கைது செய்யப்படுகிறார். தெற்கில்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு. இவ்வாறான கைதுகளின் போது சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோருங்கள்.இனவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமாயின் பொதுத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  தலைமையிலான அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். க அதேபோல் பாரிய அரசியல் சவால்களுக்கு மத்தியில் எனக்கு ஆதரவு வழங்கிய குருநாகல் தேர்தல் மாவட்ட மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இனவாதம், மதவாதம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய குரல் எழுப்பப்பட்டது. 2015  ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரணில் – மைத்திரி அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட்டிருந்தால் இந்த நாடு முன்னேற்றமடைந்திருக்கும் .அதனைத் தொடர்ந்து  நாட்டு மக்கள் கோட்டபய ராஜபஷவை தெரிவு செய்தார்கள்.

ஹிட்லராக மாறியாவது இந்த நாட்டை நிர்வகிக்குமாறு  கோட்டபய ராஜபக்ஷவுக்கு மத தலைவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். ஆனால் அவர் தன்னிச்சையான முறையில் முட்டாள்தனமாக  செயற்பட்டார். இறுதியில் நாடு மிக மோசமான  நெருக்கடிகளை எதிர்க்கொண்டது.

இவ்வாறான பின்னணியில் தான் நாட்டு மக்கள் தேசியமக்கள்  சக்தி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். ஏதும் நிலையில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதிகாரம் ஊஞ்சல் போன்றது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு  மக்கள் மத்தியில் வெறுப்பினை தோற்றுவித்தது என்பதை குறிப்பிட வேண்டும். 225 உறுப்பினர்களும் திருடர்கள் என்று  முத்திரை குத்தப்பட்டது. ஆகவே உண்மையான திருடர்களை சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

ஆட்சிக்கு வந்தவுடன்  முன்னாள் ஜனாதிபதிகளின்  சிறப்புரிமைகளை இரத்து செய்வதாகவும்,  பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை இரத்து செய்வதாகவும், குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனால்  சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவின் மனைவி  அரசாங்கத்தில் உள்ளார்.

இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. இனவாதத்தை இல்லாதொழிக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன். இனவாதிகளுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க கூடாது. கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

வடக்கில் சிவாஜிலிங்கம் தண்டனை சட்டகோவையின் பிரகாரம் கைது செய்யப்படுகிறார். தெற்கில்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு. இவ்வாறான கைதுகளின் போது சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோருங்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணம் மற்றும் எரிபொருள் கட்டணத்தை குறைப்பதாக  தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டது பொய்யாக்கப்பட்டுள்ளது.  டீசல் இறக்குமதியின் போது 50 ரூபாவும், பெற்றோல் இறக்குமதியின் போது 72 ரூபாவும்,  பெறுமதி சேர் வரியாக 18 சதவீதமும் அறவிடப்படுகிறது. ஆனால் எரிபொருள் மற்றும் மின் கட்டணம். குறைக்கப்படவில்லை என்றார்.