புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை 13 ஆம் திருத்தச்சட்டமும், மாகாணசபை முறைமையும் தொடரும் எனவும், அதற்கமைய எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் மாகாணசபைத்தேர்தல்கள் நடாத்தப்படும் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி புதிய அரசியலமைப்பிலேயே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வை உள்வாங்கமுடியும் எனவும், அதுபற்றி தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நிச்சயம் கலந்துரையாடப்படும் எனவும் உத்தரவாதமளித்துள்ள ஜனாதிபதி, இனிவரக்கூடிய புதிய அரசியலமைப்பானது பிரிவினைக்கானதாகவன்றி, இலங்கை எனும் ஒருமித்த நாட்டை இலக்காகக்கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், தமிழரசுக்கட்சியின் சிவஞானம் சிறிதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகநாதன் குகதாசன், இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி ஸ்ரீநாத், துரைராசா ரவிகரன் ஆகிய 8 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (4) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த இச்சந்திப்பில் அரசியலமைப்புக்கான 13 ஆம் திருத்தச்சட்டம், மாகாணசபைத்தேர்தல்கள், புதிய அரசியலமைப்பு உருவாக்கம், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு என்பன உள்ளடங்கலாக வட, கிழக்குவாழ் தமிழ் மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அரசியல் தீர்வு
சந்திப்பின் தொடக்கத்திலேயே அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன்போது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இணைந்த வட, கிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்கவேண்டும் என்பதே தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடாக இருப்பதாக அக்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் எடு;த்துரைத்தனர். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகையில், அதில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு உள்வாங்கப்படும் எனவும், அதன் உருவாக்கப்பணிகள் முன்னெடுக்கப்படும்போது தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இதுபற்றி நிச்சயமாகக் கலந்துரையாடப்படும் எனவும் ஜனாதிபதி உத்தரவாதமளித்தார். அதுமாத்திரமன்றி புதிய அரசியலமைப்பானது பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமையாது எனவும், மாறாக இலங்கை எனும் ஒருமித்த நாட்டை முன்னிறுத்துவதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாகாணசபை முறைமை
அதேபோன்று புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அரசியலமைப்புக்கான 13 ஆம் திருத்தச்சட்டமும், மாகாணசபை முறைமையும் தொடரும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, இருப்பினும் இவ்வருடம் இரண்டு தேர்தல்கள் நடாத்தப்பட்டதன் காரணமாக உடனடியாக மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவது சாத்தியமில்லை என சுட்டிக்காட்டினார். அதன்படி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களும், அதே வருடத்தின் (2025) அரையாண்டுக்குப் பின்னர் அல்லது ஆண்டின் இறுதியில் மாகாணசபைத்தேர்தல்களும் நிச்சயமாக நடாத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அரசியல் கைதிகள்
அதேவேளை நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழரசுக்கட்சி உறுப்பினர்களால் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் தவறிழைத்திருந்தாலும், இல்லாவிட்டாலும், அவர்கள் அதற்குரிய தண்டனையை நீண்டகாலம் அனுபவித்துவிட்டார்கள் என்ற கரிசனை தனக்கும் இருப்பதாகக் குறிப்பிட்டார். அதன்படி அவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், அவர்களுக்கு எதிராக வழக்குத்தொடரப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர்களை பிணையிலோ அல்லது சட்டத்தின் பிரகாரம் விடுவிப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து சட்டமா அதிபருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.
வலிந்து காணாமலாக்கப்படல்கள்
அடுத்ததாக வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய தமிழ் பிரதிநிதிகள், இவ்விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு இல்லை என்பதாலும், கடந்தகால ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளாலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின்மீது நம்பிக்கை இழந்திருப்பதாகக் குறிப்பிட்டனர்.
அதேபோன்று கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தவேண்டியது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அதனை உறுதிப்படுத்துவதில் சர்வதேச பொறிமுறை பற்றி பேசப்பட்டபோது, ‘தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச பொறிமுறை சாத்தியமில்லை அல்லவா?’ என்ற ரீதியில் கருத்துரைத்த ஜனாதிபதி, இருப்பினும் உள்ளகப்பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளிட்ட சர்வதேசத்தின் பங்கேற்பை உள்வாங்குவதில் ஓரளவு ஏற்புடைமையை வெளிப்படுத்தினார்.
பயங்கரவாதத்தடைச்சட்டம்
அத்தோடு கடந்த காலங்களில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு மேலதிகமாக, தற்போது அச்சட்டத்தின்கீழ் இடம்பெறும் கைதுகள் குறித்தும் தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தமது தீவிர கரிசனையை வெளிப்படுத்தினர். அதற்குப் பதிலிறுத்த ஜனாதிபதி, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்ற தமது கடந்தகால நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும், இருப்பினும் இனிவருங்காலங்களில் இந்நாட்டில் இனவாதத்துக்கு இடமில்லாத காரணத்தால் இனவாதத்தைப் பரப்ப முற்படுவோருக்கு எதிராக அச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவும் விளக்கமளித்தார். இருப்பினும் அச்சட்டத்தை நீக்கி, அதன் விளைவாக ஏற்படும் வெற்றிடத்துக்கு சர்வதேச நியமங்களுக்கு அமைவாகப் பிறிதொரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
காணி அபகரிப்பு
மேலும் காணி விவகாரத்தில் குறிப்பாக மகாவலி குடியேற்றம், தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறிய காணி அபகரிப்புக்கள், வன இலாகா, கடற்சூழல் பாதுகாப்பு, இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் பாடசாலைகள், மயானங்கள் உள்ளிட்ட காணிகள் பற்றி ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, வெகுவிரைவில் உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
நிர்வாகப் பிரச்சினைகள்
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், இன்னமும் அங்கு கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என தமிழ் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் விசனம் வெளியிட்டனர். பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி இதற்கு உடனடியாகத் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி பதிலளித்தார்.
வட, கிழக்கு அபிவிருத்தி
அதேவேளை வட, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு தான் முன்னுரிமை வழங்குவேன் என்றும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற வேறுபாடின்றி சகலருக்கும் ஒரேவிதமாக அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். வட, கிழக்குக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாத பட்சத்தில், அதற்கு மேலதிகமாக உலக வங்கி போன்ற சர்வதேச கட்டமைப்புக்களிடம் நிதி உதவியை நாடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.