களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை கடத்தி வந்தவர்கள் யார்? வேன் யாருடையது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிகளவில் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.இதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்த போதிலும் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கிறது.
களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து களியக்காவிளை போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். படந்தாலு மூடு சோதனை சாவடியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மினி வேனை ஒன்றை தடுத்தனர். ஆனால் டிரைவர் வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். சந்தேகம் அடைந்த போலீசார் இது குறித்து நெடுஞ்சாலைத்துறை ரோந்து படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் நிற்காமல் சென்ற வேனை துரத்திச் சென்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி ஒற்றா மரம் பகுதியில் வைத்து அந்த வேனை மடக்கினர். அப்போது வேனில் இருந்த 2 பேர் தப்பியோடி விட்டனர்.
போலீசார் வேனை சோதனை செய்தபோது அதில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 5 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பிடிபட்ட வேனையும், ரேசன் அரிசியையும் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் ரேசன் அரிசி கேரளாவிற்கு கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது.
ரேசன் அரிசியை கடத்தி வந்தவர்கள் யார்? வேன் யாருடையது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிடிபட்ட வேனையும், பறிமுதல் செய்யப்பட்ட அரிசியையும் உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.