பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) கூடியது. இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும், ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் புதிய தலைவியாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவுசெய்யப்பட்டார். அவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா திலகரத்ன வழிமொழிந்தார்.
அத்துடன், பெண் பாராளுன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களாக இருவர் தெரிவுசெய்யப்பட்டனர். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி பண்டார கிரிஎல்லே, பிரதி இணைத்தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், இவருடைய பெயரை ரோஹினி விஜேரத்ன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க வழிமொழிந்தார். மேலும் மற்றுமொரு பிரதி இணைத்தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தெரிவுசெய்யப்பட்டதுடன், அவருடைய பெயரைப் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே வழிமொழிந்தார்.